சென்னை:தமிழ்நாடு அளவிலான மழைக்கால நோய்கள் மற்றும் டெங்கு தடுப்பு பணிகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என். நேரு, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இக்கலந்தாய்வு கூட்டம் மழைக்கால நோய் மற்றும் டெங்கு காய்ச்சல் போன்ற எப்படி உருவாகிறது, அதனை தடுப்பது எப்படி, மக்களுக்கு இந்நோய்கள் குறித்து மக்களுக்கு எப்படி விழிப்புணர்வு ஏற்படுத்துவது போன்ற பல அறிவுரைகள் அரசு அலுவலர்களுக்கு வழங்கப்பட்டது.
இதில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் செந்தில் குமார், நகர்ப்புற வளர்ச்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மை செயலாளர் சிவதாஸ் மீனா, ஊரக வளர்ச்சித்துறை முதன்மை செயலாளர் அமுதா, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, 45 மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மாவட்டங்களில் இருந்தும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அதிகாரிகள், தமிழ்நாட்டில் உள்ள 36 அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரிகளின் முதல்வர்கள், வருவாய் துறை, ஊரக வளர்ச்சித்துறை உள்ளிட்ட துறைகளின் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.
மேலும், இந்நிகழ்வில் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தை சிறப்பாக செயலாற்றிய திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, கடலூர் அரசு தலைமை மருத்துவமனை, இராமநாதபுரம் சாயல்குடி ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவற்றிக்கு பாராட்டு சான்றிதழ்களை அமைச்சர்கள் வழங்கினார். மேலும் விரிவான காப்பீடு திட்டத்தை செயல்படுத்த உதவியாக இருந்த யுனைடெட் இந்தியா, விடால் ஹெல்த், மெடி ஆசிஸ்ட் உள்ளிட்ட காப்பீட்டு நிறுவனங்களும்யும் கௌரவித்து பாராட்டு சான்றிதழைகளை அமைச்சர்கள் வழங்கினர்.
பின்னர் மேடையில் பேசிய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்: தமிழ்நாட்டில் தடுப்பூசி போடும் பணியை ஒரு இயக்கமாகவே மாற்றப்பட்டுள்ளது. இதுவரை 95.96 % முதல் தவணை தடுப்பூசியும், 89.44 % பேர் இரண்டாவது தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. டெங்கு, மலேரியா டைபாய்டு உள்ளிட்ட மழைக்கால நோய்களால் 2017யில் தான் அதிகபடியானவர்கள் பாதிக்கப்பட்டு 65 பேர் மரணம் அடைந்துள்ளனர். கடந்த ஆண்டு கரோனாவால் மே மாதம் மட்டும் 10,136 பேர் தமிழ்நாட்டில் மரணம் அடைந்துள்ளனர். 85 லட்சமாவது பாயானளி மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் விரைவில் பயன்பெற இருக்கிறார், 1.5 லட்சம் பேர் இன்னுயிர் காப்போம் திட்டத்தின் மூலம் பயன்பெற்று இருக்கிறார்கள்.