தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காலாவதி மருந்துகள் விநியோகம் - பறக்கும் படைகள் அமைக்க அறிவுறுத்தல் - government hospitals

அரசு மருத்துவமனைகளில் காலாவதி மருந்துகள் விநியோகத்தை தடுக்கும் வகையில் பறக்கும் படைகளை அமைத்து திடீர் சோதனைகள் நடத்த வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Nov 9, 2022, 6:28 PM IST

சென்னை:கோயம்புத்தூர் மாவட்டம், அரசு மருத்துவமனையில் மருந்துகளை காலாவதியாகச் செய்ததாக, பணி ஓய்வு பலன்கள் வழங்க மறுத்ததை எதிர்த்து, மருந்து ஸ்டோர் பொறுப்பாளர் முத்துமாலை ராணி என்பவர் தாக்கல் செய்த வழக்கு, நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் முன்பு இன்று (நவ.09) மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் காலாவதியாகாமல் தடுக்க பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்த அறிக்கையை அரசு வழக்கறிஞர் ஸ்டாலின் அபிமன்யு தாக்கல் செய்தார். அந்த அறிக்கையில், அரசு மருத்துவமனைகளுக்கு காலாவதியாகாத மருந்துகளை வழங்க ஏதுவாக, கொள்முதல் முதல் விநியோகம் வரை, பல்வேறு நடைமுறைகள் பின்பற்றப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேவைக்கும் அதிகமாக ஒரு குறிப்பிட்ட மருத்துவமனையில் மருந்துகள் இருந்தால் அவற்றைத் தேவையான மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது என்றும்; ஆறு மாதங்களுக்குத் தேவையான மருந்துகள் மட்டுமே கொள்முதல் செய்யப்படுவதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அரசு மருத்துவமனையில் மருந்துகள் இல்லாவிட்டால் புகார் செய்வதற்கு கட்டணமில்லா தொலைபேசி எண் 104 வழங்கப்பட்டுள்ளதாகவும், அனைத்து மருத்துவமனைகளிலும் புகார் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளதாகவும் விளக்கமளிக்கபட்டுள்ளது.

அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் மருந்துகளில், விற்பனைக்கு அல்ல என்று அச்சிடப்பட்டுள்ளதால் மருத்துவர்கள் தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச்சென்று பயன்படுத்த வாய்ப்பில்லை எனவும், காலாவதியான மருந்துகளை திரும்பிப்பெற வேண்டும் என்ற உத்தரவாதத்துடன் மருந்து உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து மருந்துகள் கொள்முதல் செய்யப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு மருத்துவமனை மருந்துகளை தனியாருக்கு விற்பனை செய்வதாகப் புகார்கள் வந்தால், விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை குறித்து திருப்தியும், பாராட்டும் தெரிவித்த நீதிபதி, இதை அமல்படுத்த வேண்டும் எனவும், அரசு மருத்துவமனைகளில் காலாவதி மருந்துகள் விநியோகத்தை தடுக்கும் வகையில் பறக்கும் படைகளை அமைத்து திடீர் சோதனைகள் நடத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

நாட்டில் பிற மாநிலங்களில் இல்லாத மருத்துவ கட்டமைப்பு தமிழ்நாட்டில் உள்ளதாகச் சுட்டிக்காட்டிய நீதிபதி, மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்கள், செவிலியர் பணியில் இருப்பதை உறுதி செய்ய பயோ மெட்ரிக் வருகைப்பதிவேடு முறையைப் பின்பற்றலாம் எனவும், கண்காணிப்பு கேமராக்களை பொருத்தலாம் எனவும் யோசனை தெரிவித்து, விசாரணையை நவம்பர் 11ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

இதையும் படிங்க:சட்டவிரோதப்பணி நியமனம்; பொதுப்பணித்துறைச்செயலர் ஆஜராக உத்தரவு!

ABOUT THE AUTHOR

...view details