சென்னை:சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அலுவலர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'பத்மசேஷாத்ரி பால பவன் பள்ளி ஆசிரியர் மீது பள்ளிக் கல்வித்துறை சார்பாக விசாரணை நடைபெற்றது. தற்போது, காவல் துறை அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணைக்குப் பிறகு அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆன்லைன் வகுப்புகளில் இதுபோன்று சம்பவங்கள் நடைபெறும் என எதிர்பார்க்கவில்லை. மாநிலம் முழுவதும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க குழு அமைக்க அரசு முடிவெடுத்துள்ளது. மேலும், மாணவிகளுக்குப் பாலியல் தொல்லைகள் கொடுப்பது குறித்து விசாரணை செய்வதற்கு மத்திய அரசு விசாகா கமிட்டி அமைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. அதனடிப்படையில் பள்ளிகளில் விசாகா கமிட்டி செயல்பட்டு வருகிறது. பள்ளி வளாகங்களில் விசாகா கமிட்டி விரைவில் அமைக்கப்படும்.