தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முதலாளியின் வங்கிக்கணக்கில் இருந்து ரூ. 24 லட்சம் சுருட்டியவர் கைது - கர்நாடக மாநிலம்

சென்னையில் வீட்டின் உரிமையாளரின் வங்கிக் கணக்கில் இருந்து, சுமார் ரூ.24 லட்சத்தை திருடியவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

கைதான வேலைக்காரர்
குழந்தை சாமி

By

Published : Jun 14, 2021, 4:44 PM IST

Updated : Jun 14, 2021, 6:42 PM IST

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் (71). இவர், பெங்களூருவில் மென்பொருள் பொறியாளராகப் பணியாற்றி வந்தார். இவரது மகள் திருமணமாகி, தற்போது வெளிநாட்டில் வசித்து வருகிறார்.

கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சுப்பிரமணியனுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதன் பின்னர், மருத்துவச் சிகிச்சைக்காக சென்னை பல்லாவரத்தை அடுத்த பம்மல் வ.உ.சி.நகர் ஆறுமுகம் தெருவில், வாடகைக்கு வீடு எடுத்து, மனைவி மீனாட்சியுடன் (70) தங்கி வருகிறார்.

உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவர், அதே பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில், சென்னை தனியார் காப்பகத்தில் பணி புரிந்து வந்த கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த குழந்தைசாமி (40) என்பவரை வீட்டு வேலைக்காக பணி அமர்த்தினார்.

கடந்த 17 மாதங்களாக பணிபுரிந்து வரும் அவரிடம், தனது வங்கிக் கணக்கு வரவு, செலவு அனைத்தையும் குழந்தைசாமியே பார்த்து கொள்ளுமாறு சுப்பிரமணியன் அறிவுறுத்தியிருந்தார்.

இந்த நிலையில், வெளிநாட்டிலுள்ள மகள், தனது தந்தையின் வங்கி கணக்கை சரிபார்த்தபோது, கடந்த இரண்டு மாதங்களில் ரூ.20 லட்சத்துக்கு மேல் வங்கியில் இருந்து எடுக்கப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து தனது தந்தையிடம் மகள் கேட்டுள்ளார்.

அதற்கு அவர், நான் இவ்வளவு பணத்தை எடுக்கவில்லை என்று மகளிடம் தெரிவித்துள்ளார். பணம் குறைந்தது தெரியவந்ததும் அதிர்ச்சியடைந்த சுப்பிரமணியன், வரவு, செலவு கணக்குகளை பராமரித்துவரும் குழந்தைசாமியிடம் இதுபற்றி கேட்டுள்ளார்.

அதற்கு அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்துள்ளார். உண்மையைத் தெரிவிக்காவிட்டால், காவல் நிலையத்தில் உன் மீது புகார் அளிப்பேன் என, சுப்பிரமணியன் கூறியதும், தான் மாட்டிக் கொள்வோம் என்று எண்ணி வீட்டிலிருந்து தப்பியோடினார்.

தப்பியோடிய குழந்தைசாமி குறித்து, வெளிநாட்டில் உள்ள தனது மகளுக்கு சுப்பிரமணியன் தெரிவித்தார். உடனே அவரின் தொலைபேசி எண்ணுக்குத் தொடர்பு கொண்டு, சுப்பிரமணியன் மகள் கேட்டபோது, வங்கிக் கணக்கில் இருந்து ரூ.50 ஆயிரம் மட்டுமே எடுத்ததாகவும், அதை திருப்பி அளிக்கிறேன் எனக்கூறி, வங்கிக் கணக்கில் 50 ஆயிரத்தை மட்டும் அனுப்பிவிட்டு செல்போன் எண்ணையும் அணைத்து வைத்துள்ளார்.

நூதன முறையில், தனது தந்தையின் வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை எடுத்த குழந்தைசாமி மீது நடவடிக்கைக்கோரி, வெளிநாட்டிலுள்ள அவரது மகள் சென்னை சைபர் கிரைம் காவல்துறையிடம் ஆன்லைனில் புகார் அளித்தார்.

இதுகுறித்து சங்கர் நகர் காவல் நிலையத்திலும், சுப்பிரமணியனும் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த சங்கர் நகர் காவலர்கள் தலைமறைவான பணியாளை தேடி வந்தனர்.

இந்த நிலையில், குழந்தைசாமி கடைசியாகப் பேசிய அழைப்பின் செல்போன் டவர் விவரங்களை வைத்து விசாரணை நடத்தியதில், அவர் கள்ளக்குறிச்சியில் இருப்பது தெரியவந்தது.

உடனே அங்கு சென்ற சங்கர் நகர் காவலர்கள், தலைமறைவாக இருந்த குழந்தைசாமியை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தியதில், தான் பணம் திருடியதை ஒப்பு கொண்டதோடு, பணம் அனைத்தையும் பங்குச் சந்தையில் முதலீடு செய்திருப்பதாகதெரிவித்துள்ளார்.

இதையடுத்து குழந்தைசாமி மீது வழக்குப்பதிவு செய்த காவலர்கள், நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Last Updated : Jun 14, 2021, 6:42 PM IST

ABOUT THE AUTHOR

...view details