'பாண்டியன் ஸ்டோர்ஸ்' என்ற சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்த நடிகை சித்ரா, பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டையில் உள்ள தனியார் ஹோட்டலில் நேற்று அதிகாலை தற்கொலை செய்துகொண்டார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து இன்று (டிசம்பர்-10) காலை 11.30 மணிக்கு உடல்கூராய்வு நடைபெற்றது. அவரது உடல்கூராய்வு அறிக்கையில் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், சித்ரா கன்னத்தில் இருந்த காயம், அவர் தூக்குப் போட்டபோது வலியால் கையை உதறியதால் சித்ராவின் கை நகங்களால் ஏற்பட்ட காயம் என முதல்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் சித்ராவின் கணவர் ஹேம்நாத் மற்றும் ஹோட்டல் ஊழியர்களிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை செய்துவரும் நிலையில், சித்ராவின் தந்தை காமராஜ் அளித்த புகாரில் பதியப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையில் முரண்பட்ட தகவல் வெளியாகியுள்ளது. அந்த புகாரில் தனது மகள் சித்ரா விற்கும் ஹேம்நாத்துக்கும் பிப்ரவரி மாதம் பத்தாம் தேதி திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது. மகளுக்கு 50 சவரனும், ஹேம்நாத்துக்கு 20 சவரன் நகை போடுவதாக இருந்தது.
சம்பவத்தன்று இரவு தனது மனைவியிடம் சித்ரா பேசியதாகவும், அதன் பிறகு அதிகாலையில் தனது சம்பந்தி ரவிச்சந்திரன் தனக்கு போன் செய்தபோது தான் தூங்கியதால் எடுக்கவில்லை. அதன்பிறகு பேசியபோது ஓட்டலில் சித்ரா தூக்கு போட்டு இறந்துவிட்டதாகவும் ஷூட்டிங் முடித்துவிட்டு வந்தவர் காரில் உள்ள கவரை எடுத்து வருமாறு ஹேம் நாத்திடம் கூறியதாகவும் வெளியே வந்து கவரை எடுத்து விட்டு வந்தபோது கதவை சாத்திக் கொண்டதாகவும், அதன் பிறகு கதவை திறந்து பார்த்தபோது சித்ரா இறந்துபோனதாக அந்த முதல் தகவல் அறிக்கையில் பதிவாகி உள்ளது.
முதலில் குளித்துவிட்டு உடை மாற்ற வேண்டும், தன்னை வெளியே செல்லுமாறு சித்ரா கூறியதாக ஹேம்நாத் கூறி வந்த நிலையில், சித்ராவின் தந்தை அளித்த புகாரில் பதியப்பட்டுள்ள முரண்பட்ட தகவலால் காவல்துறையினர் குழப்பம் அடைந்துள்ளனர். சித்ராவின் இறப்பு தற்கொலைதான் என மருத்துவர்கள் தெரிவித்தாலும் காவல் நிலையத்தில் இருந்து இன்னும் ஹேம்நாத் இன்னும் காவலர்கள் அனுப்பவில்லை. தங்களது விசாரணை வளையத்திற்கு உள்ளேயே வைத்திருக்கின்றனர்.