அமெரிக்க துணை அதிபரைச் சந்திக்கும் நரேந்திர மோடி
நான்கு நாள்கள் அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா சென்ற பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆப்பிள் நிறுவன தலைமைச் செயல் அலுவலர் டிம் ஹூக்கையும் அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸையும் சந்தித்துப் பேசவுள்ளார். மேலும் அங்கிருக்கும் தொழிலதிபர்களுடன் ஆலோசனையிலும் ஈடுபடுகிறார்.
வேட்புமனுக்கள் பரிசீலனை
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் அக்டோபர் 6, 9 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெறுகிறது.
திருப்பதியில் இலவச டோக்கன்
திருப்பதியில் ஏழுமலையானை இலவசமாக தரிசிக்க டோக்கன்கள் இன்றுமுதல் வழங்கப்படுகின்றன.
திருச்செந்தூர் முருகன் கோயிலில் பக்தர்களுக்கு கூடுதல் நேரம்
திருச்செந்தூர் முருகன் கோயில் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் இன்றுமுதல் அதிகாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என நிர்வாகம் அறிவித்துள்ளது. ஏற்கனவே காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில் இன்றுமுதல் கூடுதல் நேரம் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
வலிமை காணொலி
அஜித் நடிப்பில் உருவாகிவரும் வலிமை திரைப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்குத் திரைக்கு வரும் எனப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தொடர்ந்து வலிமை தொடர்பாக சிறிய காணொலியைப் படக்குழு இன்று வெளியிடத் திட்டமிட்டுள்ளது.
ஐபிஎல் போட்டி
ஐக்கிய அமீரகத்தில் நடைபெற்றுவரும் ஐபில் சீசன் தொடரில் இன்று மும்பை இந்தியன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இடையே போட்டி நடைபெறுகிறது.