சென்னை: மேகதாது அணை தொடர்பாக சட்டப்பேரவையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை நீர்வளத்துறை அனைச்சர் துரைமுருகன் தாக்கல் செய்தார்.
இதனைத் தொடர்ந்து துரைமுருகம் பேசுகையில், “காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பையும், உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பையும் மதிக்காமலும், சம்பந்தப்பட்ட மாநிலங்களின் இசைவைப் பெறாமலும், ஒன்றிய அரசின் எந்தவித அனுமதியைப் பெறாமலும், தன்னிச்சையாக காவிரி நதியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட நிதி ஒதுக்குவதை எவ்வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது என்பதால் கர்நாடக அரசின் இச்செயலுக்கு தனது கடும் கண்டனத்தை இப்பேரவை தெரிவித்துக்கொள்கிறது.
கர்நாடகாவின் மேகதாது அணைத் திட்டத்திற்கு தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் உட்பட எவ்வித அனுமதியும் அளிக்கக் கூடாது என ஒன்றிய அரசை இம்மாமன்றம் வலியுறுத்துகிறது. காவிரி நதிநீர்ப் பிரச்சினை ஒரு நீண்டகாலப் பிரச்சினையாகும். இதற்குத் தீர்வாக உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு செயலாக்கப்பட்டு வருகிறது.
இப்பிரச்சினை இரு மாநிலங்களின் உணர்வுபூர்வமான பிரச்சினையாகும். ஆதலால் கர்நாடக அரசு மேகதாதுவிலோ அல்லது காவிரிப்படுகையில் வேறு எந்த இடத்திலோ அணை அல்லது எவ்வித புதிய நீர்த்தேக்க திட்டத்தை, மற்றப்படுகை மாநிலங்களின் இசைவு இன்றியும், ஒன்றிய அரசின் ஒப்புதல் இல்லாமலும் மேற்கொள்ளக் கூடாது என கர்நாடக அரசினை அறிவுறுத்துமாறு ஒன்றிய அரசை இம்மாமன்றம் கேட்டுக்கொள்கிறது.
உச்ச நீதிமன்றத்தின் ஆணையின்படி, அதன் அளிக்கப்பட்ட தீர்ப்பினைச் செயல்படுத்த, காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. எனவே, உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் குறிப்பிடப்படாத, அணையை மேகதாதுவில் கட்ட கர்நாடக அரசின் விரிவான திட்ட அறிக்கையை பரிசீலிக்கவோ, அதற்கு அனுமதி அளிக்கவோ கூடாது என்று ஆணையத்தை இம்மாமன்றம் கேட்டுக்கொள்கிறது.
கர்நாடக அரசின் இந்த முயற்சியை முறியடித்து, தமிழ்நாடு விவசாயிகள் நலனைப் பாதுகாத்திட தமிழ்நாடு அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் இப்பேரவை ஒருமனதாக தெரிவித்துக்கொள்கிறது. முன்மொழிவதற்கு முன்பு, அமைச்சர் துரைமுருகன், தண்ணீர் பெருவது பெரும் சவாலாக உள்ளது.
தொடர்ந்து முட்டுகட்டை போட்டார்கள். ஒவ்வொரு முறையும் தடைகள் வந்தது. ஆணையம் போட வேண்டும் என்று கேட்டோம். ஆனால், போட மாட்டோம் என்று சொன்னார்கள். கருணாநிதி இந்தப் பிரச்னையில் போராடினார். நம்மையும் மீறி போனால் நமது கொள்ளு பேரனையும் தாண்டி இந்த பிரச்னை போகும். உச்சநீதிமன்றம் தீர்ப்பையும் மீறி அனை கட்டுவோம் என்கிறார்கள். கர்நாடகாவில் அனைத்து கட்சியினரும் ஒரே அணியில் இருக்கிறார்கள். நான் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.