சென்னை: கடந்த 2011 முதல் 2015ஆம் ஆண்டு வரை தற்போதைய தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, அதிமுக அமைச்சரவையில் போக்குவரத்துத்துறை அமைச்சராக பதவி வகித்து வந்தார்.
அதிமுக ஆட்சிக் காலத்தில் அமைச்சராக பதவி வகித்தபோது 81 பேரிடம் வேலை வாங்கித் தருவதாக, ரூ.1.62 கோடி மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜி உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
மோசடி புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு
சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த கணேஷ்குமார், தேவசகாயம் உள்ளிட்டோரே சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையில் புகாரளித்தவர்கள் ஆவர். இந்தப் புகாரின் அடிப்படையில் அமைச்சர் செந்தில் பாலாஜி, அன்னராஜ், பிரபு, சகாயராஜ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இது தொடர்பான வழக்கு விசாரணை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றன.
குற்றப்பத்திரிகை நகலைப் பெற்றுக் கொள்ள ஆஜராக உத்தரவு
இந்நிலையில் மோசடி தொடர்பாக மேலும் 2 வழக்குகள், அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்ட 47 பேர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு காவலர்களால் வழக்குப்பதிவு செய்யப்பட்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் குற்றப்பத்திரிகையை பெற்றுக்கொள்ள செந்தில்பாலாஜி உள்ளிட்டோர் நேற்று (ஜூலை 15) சிறப்பு கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து செந்தில்பாலாஜி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராக உயர்நீதிமன்றத்தின் மூலம் விலக்கு பெற்றார்.
குற்றப்பத்திரிகை நகலை பெற்றுக் கொண்ட செந்தில் பாலாஜி வழக்கறிஞர்
வழக்கு விசாரணை நீதிபதி என்.ஆலிசியா அமர்வு முன்பு நடைபெற்றது, அப்போது அமைச்சர் செந்தில்பாலாஜி தரப்பில் ஆஜரான வக்கீல் குற்றப்பத்திரிகை நகலை பெற்றுக்கொண்டார்.
இதேபோன்று குற்றம்சாட்டப்பட்ட பிறரும் தங்களுக்கான குற்றப்பத்திரிகை நகலை பெற்றுக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து வழக்கு விசாரணையை வரும் 27ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.
இதையும் படிங்க:281 பேருக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய முதலமைச்சர்!