அவ்வப்போது சர்ச்சையிலும் நய்யாண்டியிலும் சிக்கி சிரமப்படும் அரசியல்வாதிகளில் தற்போதைய அமைச்சர் செந்தில்பாலாஜி முக்கியமானவர். சட்டப்பேரவைத் தேர்தல் பரப்புரையின்போது, "திமுக ஆட்சிக்கு வந்ததும் முதலமைச்சராக ஸ்டாலின் பதவியேற்று ஐந்தாவது நிமிடத்தில் மாட்டு வண்டியை நீங்களே ஆற்றுக்கு ஓட்டுங்கள். எந்த அதிகாரியும் தடுக்க மாட்டான். எனக்குப் போன் செய்யுங்கள். அந்த அதிகாரி இங்கு இருக்க மாட்டான்" எனப் பேசி வம்பில் மாட்டிக்கொண்டவர் செந்தில்பாலாஜி.
அவ்வளவுதான் விடுவார்களா சமூகவலைதளவாசிகள்! நய்யாண்டியும், பகடியும் செய்து வறுத்தெடுத்தனர். ஒருபுறம் இதனை நியாயப்படுத்தும் சில விஷயங்கள் முன்வைக்கப்பட்டாலும், பொதுவெளியில் அரசு அலுவலர்களை மிரட்டும் தொனியில் பேசுவதும், மணல் அள்ளச் சொல்லுவதும் தவறில்லையா என்பது மற்றொரு சாராரின் கருத்தாக உள்ளது.
மணல் கொள்ளையில் ஈடுபட்ட லாரிகளைச் சிறைப்பிடித்த எம்எல்ஏ செந்தில் பாலாஜி!
இந்த நிலையில், சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றிபெற்று ஆட்சியமைத்துள்ளது. ஸ்டாலின் அமைச்சரவையில், செந்தில்பாலாஜிக்கு மின் துறை அமைச்சர் என்ற பவர்ஃபுல் பதவி வழங்கப்பட்டது. இதற்கு அக்கட்சித் தொண்டர்கள், இரண்டாம் கட்ட தலைவர்களே, 'நேற்று கட்சிக்கு வந்தவர்களுக்கெல்லாம் தளபதி பவர்ஃபுல் போஸ்டிங் தர்றாரே' எனப் புலம்பத் தொடங்கினர்.
இதையடுத்து, தமிழ்நாட்டில் ஆங்காங்கே சில இடங்களில் மீண்டும் மின்வெட்டு ஏற்படத் தொடங்கியது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் அதிருப்தி காணப்பட்டது. 'இவங்க ஆட்சிக்கு வந்தாலே இப்படித்தான் இருக்கும்' என டீக்கடைகளில் புலம்புவதைக் கேட்க முடிந்தது.
இதற்கு அமைச்சர் கொடுத்த விளக்கம்தான் நெட்டிசன்கள் மத்தியிலும், அரசியல் அரங்கிலும் மிகவும் பேசுபொருளானது. அதில், 'சில இடங்களில் செடிகள் வளர்ந்து மின் கம்பிகளுடன் மோதுவதால் அங்கு அணில்கள் வருகின்றன. இதனால் மின்தடை ஏற்படுகிறது' என செந்தில்பாலாஜி விளக்கியிருந்தார்.
அணிலும் அமைச்சரும்... ரவுண்டு கட்டும் எதிர்க்கட்சிகள்
எப்படா கன்டன்ட் கிடைக்கும் என்று 'வடைக்கு காத்திருந்த காகம்' போல, நெட்டிசன்கள் இதனை ஊதிப் பெரிதாக்க, அணிலும், செந்தில்பாலாஜியும்தான் அப்போதைய ஹாட் டாபிக். இது பொதுவெளியிலும் கிண்டலுக்கு உள்ளானது.
'அதிமுக ஆட்சியில் வெளிநாடு சென்ற அணில்கள்தான் தற்போதைய மின்தடைக்கு காரணமா' என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு நக்கலாகக் கேள்வி எழுப்பினார். அதுமட்டுமல்லாது செந்தில் பாலாஜியின் கண்டுபிடிப்புக்கு ஆஸ்கர் அல்லது நோபல் பரிசுகளை வழங்க வேண்டும் என்றும் அவர் வேடிக்கையாக கோரிக்கைவிடுத்திருந்தார்.
அதிமுக ஆட்சியில் தெர்மாகோல் விவகாரத்தை வைத்து செல்லூர் ராஜுவை, அவர் அமைச்சர் பொறுப்பில் இருக்கும்வரை எவ்வளவு முடியுமோ அவ்வளவு விமர்சித்துத் தீர்த்தனர் திமுகவினர். இதற்குப் பழிதீர்க்க வாய்ப்பு கிடைத்தது; செல்லூர் ராஜு அதனை கச்சிதமாகப் பயன்படுத்திக்கொண்டார் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
திமுக ஆட்சிக்கு வந்ததும் அணில்களுக்கு மட்டும் சுயாட்சி அதிகாரம் கிடைத்துவிட்டதா?, திடீர் மின் தடையால் பொதுமக்கள் மட்டுமல்லாது தொழில்களும் பாதிப்புக்கு உள்ளாகிவருகின்றன என அரசியல் தலைவர்கள் பலரும் விமர்சித்தனர். இந்த நிலையில், அமைச்சர் செந்தில்பாலாஜி நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 15) மாலை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவொன்றை இட்டிருந்தார்.
அதில், "ஈங்கூர் - திங்களுர் 110KV துணை மின் நிலையத்தில், Bphase conductor பழுதானது. அதைச் சீர்ப்படுத்தும்போது, அந்தப் பழுதுக்கு காரணம் பாம்பு என மின் பணியாளர்கள் கண்டறிந்தனர்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
செந்தில்பாலாஜியின் ட்வீட்டை பகிர்ந்துள்ள பத்திரிகையாளரும், அரசியல் விமர்சகருமான சுமந்த் சி ராமன், 'அணில் டு பாம்பு இது முன்னேற்றம் இல்லையா?' எனப் பகடி செய்துள்ளார். இதற்கு செந்தில்பாலாஜி தனது விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
இவர்களுக்கு பாம்பு பல்லிகள் பரவாயில்லை
அதன்படி, அவரது ட்விட்டர் பக்கத்தில், "பல கோமாளிகளின் மேதாவித்தனங்களை காணும்போது, பாம்பு பல்லிகளின் தொல்லைகள் பரவாயில்லை என தோன்றுகிறது சுமந்துராமன்..." எனக் குறிப்பிட்டுள்ளார்.
இச்சூழலில், கரூர்வாசிகள், 'கரூரை எப்போது மாநகராட்சி ஆக்கப் போகிறீர்கள் அமைச்சர் செந்தில்பாலாஜி அவர்களே!' எனக் கேட்டுவருகின்றனர். முன்னதாக, தேர்தல் பரப்புரையின்போது, 100 வாக்குறுதிகள் 100 மதிப்பெண்கள் என்ற செயல்திட்ட கையேட்டை வெளியிட்ட செந்தில் பாலாஜி,'கரூரை மாநகராட்சியாக்குவேன்'எனச் சூளுரைத்திருந்தார் என்பது கவனிக்கப்பட வேண்டிய அம்சமாகும்.