சென்னை: அமலாக்கத்துறை அதிகாரிகளால் செந்தில் பாலாஜி சட்ட விரோதமாக ஜூன் 14ம் தேதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனைவி மேகலா ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார். இந்த வழக்கை நீதிபதிகள் நிஷா பானு, பாரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தனர்.
இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள், மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர். நீதிபதி நிஷா பானு அமலாக்கத்துறையினர் செந்தில் பாலாஜியை கைது செய்தது சட்டவிரோதம், அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று தீர்ப்பு அளித்தார். ஆனால், மற்றொரு நீதிபதியான பரத சக்கரவர்த்தி, செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறையினர் கைது செய்ததில் எந்த சட்ட விரோதமும் இல்லை. அவர் 10 நாட்களுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறலாம். அதற்கு மேலும் சிகிச்சை தேவைப்பட்டால் சிறையில் உள்ள அரசு மருத்துவமனையில் தான் சிகிச்சை பெற வேண்டும் என்று கூறி ஆட்கொணர்வு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
நீதிபதிகளின் மாறுபட்ட தீர்ப்பால் மூன்றாவது நீதிபதி விசாரணைக்கு உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கங்கபூர்வாலாவுக்கு இரு நீதிபதிகளும் பரிந்துரை செய்தனர். நீதிபதிகளின் பரிந்துரையை ஏற்ற தலைமை நீதிபதி, மூன்றாவது நீதிபதியாக சி.வி கார்த்திகேயன் விசாரிப்பார் என அறிவித்தார்.
அதன்படி, இந்த வழக்கு நீதிபதி கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் துஷார் மேத்தா, செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு பின்னர், நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார். சி.ஆர்.பி.சி பிரிவு 41 A படி கைது செய்யப்படவதற்கான காரணங்களை தெரிவிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. காவல்துறை விசாரணை செய்யப்படவில்லை என்பதால் ஆட்கொணர்வு மனுவை ஒரு நீதிபதி தள்ளுபடி செய்தார் என தெரிவித்தார்.