சென்னை:அமைச்சர் செந்தில் பாலாஜி சட்ட விரோதக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக கூறி அவரது மனைவி மேகலா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை நீதிபதிகள் நிஷா பானு மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வு விசாரித்தனர்.
அப்போது மேகலா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, கைதுக்கான காரணங்கள் தெரிவிக்கப்பட்டதாகவும், அதை பெற்றுக் கொள்ள செந்தில் பாலாஜி மறுத்ததாகவும், கைது தொடர்பாக உறவினர்களுக்கு தகவல் தெரிவித்ததாகவும் அமலாக்கப்பிரிவு தெரிவித்துள்ளது. ஆனால், அதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை எனவும், இதன் மூலம் சட்ட விரோதமாக கைது செய்யப்பட்டுள்ளது நிரூபணமாகியுள்ளது.
மேலும், நாடாளுமன்றம் இயற்றிய சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்டத்தில் காவல் நிலைய அதிகாரிக்கான அதிகாரம் அமலாக்கத் துறையினருக்கு வழங்காத நிலையில், அந்த அதிகாரத்தை நீதிமன்றம் வழங்க முடியாது என்பதால், காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கப் பிரிவுக்கு அதிகாரமில்லை என தெரிவித்தார்.
அமலாக்கப் பிரிவு தரப்பில் ஆஜரான மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதால் செந்தில் பாலாஜி சட்டவிரோத காவலில் இல்லை எனவும், நீதிமன்ற காவலில் வைத்த உத்தரவை எதிர்த்தோ அல்லது ஜாமீன் மறுக்கப்பட்டதை எதிர்த்தோ வழக்கு தொடரவில்லை என்பதால், ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்ததல்ல என வாதிட்டார்.
மேலும், செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலில்தான் உள்ளாரே தவிர அமலாக்கத் துறை காவலில் இல்லை என்பதால், அவரை ஆஜர்படுத்தி விடுவிக்கும்படி கோர முடியாது. சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தில், ஆதாரங்கள் இருந்தால் கைது நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என கூறியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
உரிய ஆதாரங்கள் இல்லாமல் கைது நடவடிக்கை மேற்கொண்டால் சம்பந்தபட்ட அதிகாரிக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கவும், 50 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கவும் சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளதால், செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட 10 மணி நேரத்துக்குள் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கைதுக்கான காரணங்களும் தெரிவிக்கப்பட்டது. ஆனால், செந்தில் பாலாஜி அதைப் பெற மறுத்து விட்டார் என்றார்.
செந்தில் பாலாஜியை நீதிமன்ற காவலிலும், அமலாக்கத்துறை காவலிலும் வைத்து விசாரிக்க அனுமதித்து அமர்வு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு இயந்திரத்தனமானதல்ல. அனைத்து ஆவணங்களையும் பரிசீலித்த பிறகே நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. காவலில் வைத்து விசாரிக்க அமர்வு நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளால், செந்தில் பாலாஜியை மருத்துவமனையில் வைத்து விசாரிக்க இயலவில்லை. முதல் 15 நாட்களில் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோராவிட்டால் அமலாக்கப் பிரிவு தனது கடமையைச் செய்ய தவறியதாகி விடும்.