சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அளிக்கப்பட்ட பிளட் தின்னர் சிகிச்சை நேற்று இரவு முதல் காவேரி மருத்துவமனையில் நடத்தப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து ஐந்து நாட்கள் கழித்த பின்னர் ரத்த நாளங்களில் ரத்தப்போக்கு பரிசோதனை செய்யப்பட்டு, மருத்துவர்களின் ஆலோசனையின் அடிப்படையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
அரசு பணி வாங்கித் தருவதாக பணம் பெற்ற வழக்கில் அமலாக்கத் துறையினர், அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் சோதனை நடத்தினர். அந்த சோதனையின் அடிப்படையில், அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று அழைத்துச் சென்றபோது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாகக் கூறப்பட்டது.
பின்னர், அவர் சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்பட்டது. அதில் ரத்த நாளங்களில் மூன்று இடங்களில் அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவின் மீது நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் காவேரி மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிப்பதற்கு அனுமதி வழங்கி உள்ளது. அதனைத் தொடர்ந்து நீதிமன்ற காவலில் இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜி காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில், சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கிய பின்னர் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “ கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியின் 58வது பட்டமளிப்பு விழா சிறப்பாக நடைபெற்று உள்ளது. 150 மாணவர்கள் இன்று பட்டங்களை பெற்றுள்ளனர்.