சென்னை: புழல் சிறையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மதிய உணவிற்கு பின்னர், தொடர் வாந்தி மயக்கம் ஏற்பட்டதால் பலத்த பாதுகாப்புடன் மருத்துவ பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டு பின்னர் இருதயவியல் பரிசோதனைக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையி அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சட்டவிரோத பண பரிமாற்றம் வழக்கில் அமலாக்கத்துறையால் கடந்த ஜூன் மாதம் 13 ஆம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜி, தற்போது மருத்துவ பரிசோதனைக்காக புழல் சிறையில் இருந்து சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு உள்ளார்.
அமலாக்கத்துறை சோதனையின் போது, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஒரு மாத காலமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அதன் பிறகு ஜூலை மாதம் புழல் சிறைக்கு மாற்றப்பட்டார். பின்னர் புழல் சிறையில் உள்ள மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்து வருகிறார்.
சமீபத்தில் தொடர்ச்சியாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உடல் ரீதியான பிரச்சினைகள் இருந்ததால், கடந்த மாதம் சில நாட்கள் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அப்போது ஒரு நாள் முழுவதும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், ஓமந்தூரார் அரசு மருத்துவர்கள் குழு அவரை முழு பரிசோதனை செய்து உடல்நலம் சீரான பின்பே மீண்டும் புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டது குறிப்பிடதக்கது.