சென்னை:தமிழ்நாடு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின், சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள அரசு பங்களா, கரூரில் உள்ள அவரது பூர்வீக வீடு மற்றும் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சரின் அறை உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத் துறையினர், நேற்றைய முன்தினம் (ஜூன் 13) காலை முதல் சோதனை மேற்கொண்டனர்.
இதனையடுத்து, நேற்று (ஜூன் 14) அதிகாலை அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர். அப்போது, அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாகக் கூறி, அவர் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதனால், மருத்துவமனையில் மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டு வளையத்திற்குள் செந்தில் பாலாஜி வைக்கப்பட்டார். அதேபோல், மருத்துவமனை வளாகம் முழுவதும் சென்னை காவல் துறையினர் குவிக்கப்பட்டனர். இதனிடையே, அமைச்சர் செந்தில் பாலாஜியை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடக் கோரி அமலாக்க பிரிவு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
பின்னர், இந்த மனுவை விசாரித்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி, செந்தில் பாலாஜி சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைக்குச் சென்று அவரை நேரில் பார்வையிட்டார். இதனைத் தொடர்ந்து, வழக்கில் தொடர்புடைய அமைச்சர் செந்தில் பாலாஜியை வருகிற 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.
இந்த நிலையில், விசாரணை கைதியாக நீதிமன்ற காவலில் இருக்கும் செந்தில் பாலாஜிக்கு புழல் சிறைக் கைதிகளுக்கு வழங்கப்படும் பதிவேட்டு எண் வழங்கப்பட்டு உள்ளது. மேலும், தற்போது செந்தில் பாலாஜி அனுமதிக்கப்படு உள்ள வார்டைச் சுற்றிலும் ஏராளமான ஆயுதப்படை காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
மேலும், விசாரணைக் கைதியாக உள்ள செந்தில் பாலாஜிக்கு சிறை கைதிக்கு உள்ள விதிமுறைகள் பின்பற்றப்படும் என்பதால், அவரை பார்வையாளர்கள் பார்க்க அனுமதி இல்லை. இருப்பினும், அவ்வாறு அவரை பார்க்க வேண்டும் என்றால், சிறைத் துறை அதிகாரிகளின் ஒப்புதல் பெற்ற பின்புதான் பார்க்க அனுமதிக்கப்படுவார்கள்.
அதேநேரம், தற்போது அமைச்சர் செந்தில் பாலாஜி சுயநினைவுடன் நலமாக உள்ளதாகவும், மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொண்டதாகவும் ஓமந்தூரார் அரசு மருத்துவமனை தரப்பில் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, நேற்று அவருக்கு நேற்று காலை 10.40 மணியளவில் இருதய ரத்த நாள பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதில், அவருக்கு மூன்று முக்கியமான ரத்த குழாய்களில் அடைப்பு உள்ளதாகவும், எனவே விரைவில் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. மேலும், நேற்று திமுக தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் கோரிய மனு, மருத்துவமனை மாற்றக் கோரிய மனு மற்றும் அமலாக்கத் துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட போலீஸ் காவல் கேட்ட மனு ஆகியவை இன்று விசாரணைக்கு வர உள்ளது.
இதையும் படிங்க:Enforcement Directorate: அமலாக்கத்துறை என்றால் என்ன? - அதற்கான அதிகாரங்கள் முழு விபரம்!