சென்னை:அரசுப் பணி வாங்கித் தருவதாக பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டது தொடர்பாக, அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர். இதனையடுத்து செந்தில் பாலாஜியை கைது செய்து அழைத்துச் சென்றபோது, அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாகக் கூறி அவரை சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அமலாக்கத் துறையினர் அனுமதித்தனர்.
இதனைத் தொடர்ந்து அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்பட்டது. அதில் அவரது ரத்த நாளங்களில் மூன்று இடங்களில் அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனிடையே, செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார்.
அந்த மனுவின் மீது நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், செந்தில் பாலாஜியை சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை அளிப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டு உத்தரவிடப்பட்டது. இதனையடுத்து, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டார்.
அங்கு உள்ள 7வது தளத்தில் இருக்கும் செந்தில் பாலாஜிக்கு முதலில் சிறைத் துறை பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்த நிலையில், அமலாக்கத் துறையினரின் கோரிக்கையை ஏற்று 8 நாட்கள் செந்தில் பாலாஜியை போலீஸ் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
எனவே, செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டு உள்ள தளம் அமலாக்கத் துறையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. மேலும், செந்தில் பாலாஜியை போலீஸ் காவலில் எடுத்ததற்கான கோப்பிலும் அவர் கையெழுத்திட்டார். இதனிடையே, செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என காவேரி மருத்துவமனை தரப்பில் பரிந்துரைக்கப்பட்டது.
இந்த நிலையில், இன்று (ஜூன் 21) காலை 6 மணியளவில் செந்தில் பாலாஜி தீவிர கரோனரி பராமரிப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டார். பின்னர், இருதய நிபுணர் ரகுராம் தலைமையிலான மருத்துவக் குழு, செந்தில் பாலாஜிக்கு இருதய நாளங்களில் இருந்து மூன்று அடுக்குகளை அகற்றுவதற்கான அறுவை சிகிச்சையை மேற்கொண்டனர்.
இந்த அறுவை சிகிச்சை தொடங்கி, சுமார் 4 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற நிலையில், தற்போது அறுவை சிகிச்சை நிறைவு அடைந்துள்ளது. மேலும், இது தொடர்பாக காவேரி மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், “மூத்த இருதய அறுவை சிகிச்சை நிபுணர் ஏ.ஆர்.ரகுராம் தலைமையிலான மருத்துவக்குழு, செந்தில் பாலாஜிக்கு இன்று காலை இருதய கரோனரி ஆர்டெரி பைபாஸ் அறுவை சிகிச்சையை மேற்கொண்டனர்.
இந்த அறுவை சிகிச்சையின்போது 4 பைபாஸ் கிராஃப்டுகள் வைக்கப்பட்டு, கரோனரி ரிவாஸ்குலரைஷேசன் நிறுவப்பட்டு உள்ளது. தற்போது அவரது உடல் நிலை சீராக உள்ளது. மேலும், அவர் இருதய நிபுணத்துவம் மிகுந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அடங்கிய மருத்துவக் குழுவால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறார்” என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க:"செந்தில் பாலாஜியிடம் விசாரிக்க முடியவில்லை" - நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை புலம்பல்!