சென்னை: மின் நுகர்வோரின் புகார்களைத் தொலைபேசி வாயிலாகப் பெறும் வகையில், கடந்த ஜூன் மாதம் 20ஆம் தேதி அன்று, 'மின்னகம்' எனும் மின் நுகர்வோர் சேவை மையம் திறக்கப்பட்டது.
'மின்னகம்' திறக்கப்பட்டு 100 நாள்கள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
மின்னகம்
அதில் அவர், 'முதலமைச்சர் மூலம் மின் நுகர்வோர் சேவை மையம் திறக்கப்பட்டது முதல், இதுவரை 3 லட்சத்து 53 ஆயிரம் புகார்கள் வரப்பட்டுள்ளன. அவற்றில் 3 லட்சத்து 50 ஆயிரம் புகார்களுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது.
அதாவது 99 விழுக்காடு புகாருக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் மின் வாரியப் புகார்களுக்கு மொத்தமாக 107 எண்கள் இருந்தன. இவற்றை ஒரே எண்ணில் கொண்டு வரும் விதமாக 'மின்னகம்' எனும் மின் நுகர்வோர் சேவை திறக்கப்பட்டது. 'மின்னகம்' திறக்கப்பட்டு 100 நாள்கள் நிறைவடைந்துள்ளது.
வரும் காலங்களில் தமிழ்நாட்டின் மின் உற்பத்தியை அதிகரிக்கும் விதமான அறிவிப்புகள், சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்டுள்ளன. அவை அனைத்தும் நிறைவேற்றப்படும்.
மழைக்காலத்திற்கான முன்னெச்சரிக்கைத் தயார்
கடந்த அதிமுக ஆட்சியில், ஒன்பது மாதங்களாகப் பராமரிப்பின்றி இருந்த 2 லட்சத்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டப் பணிகள் திமுக ஆட்சியில் நிறைவடைந்துள்ளன.
8ஆயிரத்து 905 இடங்களில் புதிய மின்மாற்றிகளை அமைப்பதற்கானப் பணிகள் அண்மையில் தொடங்கின. இதில் இரண்டாயிரம் மின் மாற்றிகள் நேற்று வரை புதிதாக அமைக்கப்பட்டுள்ளன.
பருவமழைக் காலத்தில் பயன்படுத்திக் கொள்ளும் விதமாக 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் தயாராக உள்ளன.
பருவமழைக்காலங்களில் மாவட்ட ஆட்சியர்களுடன் மின்வாரியப் பணியாளர்கள் இணைந்து பணி செய்வர். மின் கட்டணம் தொடர்பாக மின்னகத்திற்கு வந்த 14 லட்சத்து 69ஆயிரம் பிரச்னைகளுக்கும் தீர்வு காணப்பட்டன.