சென்னை:சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமலாக்கத் துறையினரால், கடந்த ஜூன் மாதம் 14-ஆம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அவருக்கு எதிராக ஆகஸ்ட் 12-ஆம் தேதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 3 ஆயிரம் பக்கம் கொண்ட குற்றப்பத்திரிக்கையை, அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டதை அடுத்து, அவரது நீதிமன்ற காவல் செப்டம்பர் 15 வரை முதலில் நீட்டிக்கப்பட்டது.
இதற்கிடையில், செந்தில் பாலாஜி மீதான வழக்கை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தான் விசாரிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதன் அடிப்படையில் வழக்கு மீண்டும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. அவரது ஜாமீன் மனு கடந்த 20-ஆம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது.