சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி சட்ட விரோதக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகக் கூறி அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவில் நேற்று (ஜூலை 4) நீதிபதிகள் நிஷா பானு மற்றும் பரதச் சக்கரவர்த்தி அமர்வு தீர்ப்பு வழங்கினர்.
அப்போது மேகலா தரப்பில், கைதுக்கான காரணங்கள் தெரிவிக்கப்பட்டதாகவும், அதை பெற்றுக்கொள்ள செந்தில் பாலாஜி மறுத்ததாகவும், கைது தொடர்பாக உறவினர்களுக்குத் தகவல் தெரிவித்ததாகவும் அமலாக்கப்பிரிவு தெரிவித்துள்ளது. ஆனால், அதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை எனவும், இதன் மூலம் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டுள்ளது நிரூபணமாகியுள்ளது.
மேலும், நாடாளுமன்றம் இயற்றிய சட்டவிரோதப் பணபரிமாற்ற தடைச் சட்டத்தில் காவல் நிலைய அதிகாரிக்கான அதிகாரம் அமலாக்கத்துறையினருக்கு வழங்காத நிலையில், அந்த அதிகாரத்தை நீதிமன்றம் வழங்க முடியாது என்பதால் காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கப் பிரிவுக்கு அதிகாரமில்லை எனத் தெரிவித்தார்.
இதனை அடுத்து அமலாக்கப் பிரிவு தரப்பில், நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதால் செந்தில் பாலாஜி சட்டவிரோதக் காவலில் இல்லை எனவும், நீதிமன்றக் காவலில் வைத்த உத்தரவை எதிர்த்தோ? ஜாமீன் மறுக்கப்பட்டதை எதிர்த்தோ? வழக்குத் தொடரவில்லை என்பதால், ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்ததல்ல.
மேலும் செந்தில் பாலாஜி நீதிமன்றக் காவலில் தான் உள்ளாரே தவிர, அமலாக்கத்துறை காவலில் இல்லை என்பதால் அவரை ஆஜர்படுத்தி, விடுவிக்கும்படி கோர முடியாது. சட்டவிரோதப் பண பரிமாற்றத் தடைச் சட்டத்தில், ஆதாரங்கள் இருந்தால் கைது நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் எனக் கூறியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
அனைத்து தரப்பு வாதங்களைம் கேட்டறிந்த நீதிபதிகள் தங்களது தீர்ப்பைத் தெரிவித்தனர். அதன்படி சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் தீர்ப்பை வழங்கிய நீதிபதி நிஷா பானு, ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது தான். அமலாக்கத்துறை சட்ட விதிகளின் படி கைது நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. அதனால் செந்தில் பாலாஜியை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என தீர்ப்பளித்தார்.