சென்னை: அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவியிலிருந்து டிஸ்மிஸ் செய்வதாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், செந்தில் பாலாஜி அரசு வேலைக்கு பணம் வாங்கியது உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களுக்கு ஆளாகி, இதன் காரணமாக தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அமைச்சர் பதவியை பயன்படுத்தி விசாரணை நடைமுறைகளை தாமதமாக்குவதாகவும், விசாரணையில் தலையீடு செய்வதாகவும் ஆளுநர் மாளிகை குற்றம்சாட்டியுள்ளது. தற்போது அமலாக்கத்துறையால் விசாரிக்கப்படும் வழக்கில் செந்தில் பாலாஜி நீதி விசாரணையில் இருப்பதாகவும் அந்த செய்தியறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இது மட்டுமின்றி அவர் மீது வேறு சில கிரிமினல் வழக்குகளும் மாநில போலீசாரால் விசாரிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியிலிருந்து டிஸ்மிஸ் செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியில் தொடர்ந்தால், சட்ட நடவடிக்கைகளில் தடை ஏற்படுவதோடு, மாநிலத்தில் அரசியமைப்பின் செயல்பாட்டுக்கும் தடை ஏற்படும் என ஆளுநர் மாளிகையின் செய்தியறிக்கை கூறுகிறது. மேற்கண்ட கூறுகளை கவனத்தில் கொண்டு செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியிலிருந்து உடனடியாக டிஸ்மிஸ் செய்து ஆளுநர் உத்தரவிட்டுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் இது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளித்த அவர், அமைச்சர்களை நீக்கும் அதிகாரம் ஆளுநருக்கு கிடையாது எனக் கூறினார். இதனை தமிழ்நாடு அரசு சட்டரீதியாக எதிர்கொள்ளும் எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார்.
2016ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியின்போது போக்குவரத்துத்துறை பணி நியமனங்களுக்கு பணம் பெற்றதாக செந்தில் பாலாஜி மீது குற்றச்சாட்டு உள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணையில் அமலாக்கத்துறை உள்ளிட்ட மத்திய விசாரணை அமைப்புகள் களமிறங்கின.
இதன் தொடர்ச்சியாக செந்தில் பாலாஜி கடந்த ஜூன் 14ஆம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இதன் பின்னர் நெஞ்சுவலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செந்தில் பாலாஜிக்கு இதய அறுவை சிகிச்சை கடந்த ஜூன் 21ஆம் தேதி மேற்கொள்ளப்பட்டது. அமலாக்கத்துறை காவல் வழங்கப்பட்ட போதிலும் அவரிடம் விசாரணை நடத்த இயலவில்லை. இந்நிலையில் செந்தில் பாலாஜி தற்போது ஜூலை 12ஆம் தேதி வரை, நீதிமன்றக் காவலில் உள்ள நிலையில் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகிறார்.
ஏற்கெனவே இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிக்க ஆளுநர் மாளிகை தரப்பில் அதிருப்தி தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசாணை மூலம் செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியில் நீடித்து வருகிறார். அவரது துறைகள் வேறு அமைச்சர்களுக்கு மாற்றப்பட்டன. இந்நிலையில் செந்தில் பாலாஜியை டிஸ்மிஸ் செய்வதாக ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவித்துள்ளார்.