சென்னை:25 வருடங்களுக்கு முன்னால் சென்று பார்த்தால் கைதால் வந்த நெஞ்சு வலிக்கு பல உதாரணங்கள் கிடைக்கின்றன. 1996ம் ஆண்டு சசிகலாவின் அக்காள் மகன் பாஸ்கரன் மீது அன்னிய செலாவணி மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. சென்னை அரசு பொது மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
வாரக்கணக்கில் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தார். ஆனால் சிகிச்சை விவரம் வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை என்கிறார் பத்திரிகையாளர் லோகநாதன். பாஸ்கரன் மக்கள் பிரதிநிதி இல்லை என்ற நிலையில் அவரது உடல்நிலையும் பெரிதாக விவாதிக்கப்படவில்லை. விசாரணையில் தொய்வு ஏற்பட்டு கைது நடவடிக்கைகள் விலக்கப்பட்ட போது மருத்துவமனையில் வெளியேறினார் பாஸ்கரன்.
அதே காலகட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதரி சசிகலா மீது பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது. சசிகலாவுக்கு திடீர் உடல் நலக்குறைவு அப்போது ஏற்பட்டது. ஆனால் என்ன பாதிப்பு என்பது மட்டும் எவருக்கும் தெரிவிக்கப்படவில்லை.
முதலில் சிறிது காலம் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராவதை சசிகலா தவிர்த்தார். நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் அவர் வேறு வழியின்றி ஆஜரானார். அனைத்து வகையான உயிர் காக்கும் கருவிகள் பொருத்தப்பட்ட ஆம்புலன்ஸில் முன்னும் பின்னும் தமிழக அதிரடிப்படை போலீசார் சூழ அவர் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
நீதிமன்ற வளாகத்தில் அவர் வந்த ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டு அதனை சுற்றிலும் மருத்துவர்களும் செவிலியர்களும் பரபரப்புடன் இருப்பார்கள். ஆம்புலன்ஸ் உள்ளே சென்று சசிகலாவை சந்திக்க நீதிபதிக்கு அனுமதி மறுப்பார்கள். நீதிபதியும் வழக்கு விசாரணையை ஒத்திவைத்து விட்டு செல்வார்.
ஒரு கட்டத்தில் குற்றம் சாட்டப்பட்டவரை பார்த்தே தீர வேண்டும் என்று நீதிபதி கண்டிப்பான உத்தரவு பிறப்பித்த போது சசிகலாவின் உயிருக்கு ஆபத்து என்றால் நீதிமன்றமே பொறுப்பு என்று அதிமுக வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் கூச்சல் எழுப்பினார்கள். அதனையும் மீறி நீதிபதி ஆம்புலன்ஸ் கதவைத் திறந்து சசிகலாவை பார்த்த போது அனைத்து வகையான உயிர் காக்கும் கருவிகளும் பொருத்தப்பட்ட நிலையில் மயக்கமாக சசிகலா ஆம்புலன்ஸில் இருந்தார்.
இந்த நாடகம் பல மாதம் நீடித்தது. அதன் பின்னர், ஒரு முறை கூட சசிகலாவுக்கு இது போன்ற நிலை வரவில்லை அந்த ஆபத்தான சூழ்நிலையில் இருந்து எப்படி சசிகலா மீண்டார் என்பதற்கான மருத்துவ அறிக்கையும் இதுவரை கிடைக்கவில்லை.
இப்போது செந்தில் பாலாஜிக்கும் நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. அவரது அரசியல் வாழ்க்கை மீது பல்வேறு கழகங்கள் உள்ள போதிலும் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது என்பதை தமிழக அரசு நடத்தும் மருத்துவமனையின் மருத்துவர்களும் மத்திய அரசு நடத்தும் மருத்துவமனையில் மருத்துவர்களும் உறுதிப்படுத்தி உள்ளனர். அது மட்டுமின்றி எய்ம்ஸ் மருத்துவர்கள் பரிசோதிக்க வேண்டும் என அமலாக்கத்துறை சார்பிலும் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: எங்களுக்கும் எல்லா அரசியலும் தெரியும்; பாஜகவுக்கு வார்னிங் கொடுத்த முதலமைச்சர் ஸ்டாலின்!