சென்னை:சட்டவிரோதப் பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த ஜூன் மாதம் 14-ம் தேதி கைது செய்தனர். அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் செந்தில் பாலாஜி ஜாமீன் வழங்கக் கோரி, எம்.பி., எம்எல்ஏ க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்நிலையில், மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்த சிறப்பு நீதிமன்றம், இந்த வழக்கு சட்டவிரோதப் பணப் பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் தொடரப்பட்டது என்பதால், இது தொடர்பாகச் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தை நாடுமாறு உத்தரவிட்டது. அதன்படி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. செந்தில் பாலாஜி தரப்பில் வழக்கறிஞர்கள் அருண், பரணிக்குமார் ஆகியோர் முதன்மை அமர்வு நீதிபதி எஸ்.அல்லி முன்னிலையில் முறையிட்டனர். அதற்கு நீதிபதி, "இது தொடர்பாகச் சிறப்பு நீதிமன்றமே விசாரிக்கும்" என்றார்.
அதனைத்தொடர்ந்து, மனுவை எந்த நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்பதில் அமலாக்கத் துறை வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றமான, ‘சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம்’ மற்றும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளின் விசாரணையை நடத்தும், ‘சிறப்பு நீதிமன்றம்’ ஆகியவற்றிற்கு இடையே தெளிவில்லாத சூழல் உருவாகியுள்ளது.