சென்னை: சட்ட விரோத பண பரிமாற்றம் மற்றும் பண மோசடி வழக்கில் கடந்த ஜூன் மாதம் 14 ஆம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்த போது, திடீர் என ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில், சுமார் ஒரு மாதத்திற்கு மேலாக தனியார் மருத்துவமனையில் செந்தில் பாலாஜிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அதன் பிறகு கடந்த ஜூலை மாதம் 18 ஆம் தேதி மருத்துவமனையில் இருந்து செந்தில் பாலாஜி புழல் சிறைக்கு மாற்றப்பட்டார்.
மேலும் அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ததால், தொடர்ந்து சிறையில் இருக்கும் மருத்துவர்கள் அவரை கண்காணித்து அதற்கு உண்டான பரிசோதனைகளும் செய்து வந்தனர். மேலும் கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி எம்.பி மற்றும் எம்.எல்.ஏக்களுக்கு எதிரான வழக்குகளை விசாரணை செய்யும் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி சிவகுமாரிடம், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான 3 வழக்குகளில் மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர்.
தொடர்ந்து கடந்த செப்டம்பர் 29ஆம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் நிறைவடைந்த நிலையில், சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி அல்லி முன் அவர் காணொளிக் காட்சி மூலம் புழல் சிறையில் இருந்தவாறு ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, அவரின் நீதிமன்றக் காவலை வரும் அக்டோபர் 13ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த நிலையில் இன்று (அக். 9) திடீரென செந்தில் பாலாஜிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து அவர் ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். செந்தில் பாலாஜியின் ஒருகால் மரத்து போனதாக, அவர் மருத்துவரிடம் தெரிவித்ததன் அடிப்படையில் பரிசோதனை செய்வதற்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்ததாக சிறைத்துறை அதிகரிகள் தெரிவித்தனர்.
பரிசோதனைக்கு பிறகு மீண்டும் செந்தில் பாலாஜியை புழல் சிறைக்கு அழைத்து செல்லப்படுவார் எனவும் தெரிவித்தனர். மேலும் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இருப்பதால், சிறையில் இருக்கும் மருத்துவர்கள் தொடர்ந்து அவரை கண்காணித்து வந்த நிலையில் இன்று திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் அமைச்சர் செந்தில் பாலாஜி உடல் நிலை குறித்த அறிக்கை விரைவில் வெளியாகும் என்று மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: ராகு பெயர்ச்சியை முன்னிட்டு தஞ்சை திருநாகேஸ்வரம் கோயிலில் சிறப்பு பிரார்த்தனை! திரளான பக்தர்கள் சாமி தரிசனம்!