சென்னை:சட்டவிரோதமாக பணப்பரிமாற்ற செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். மேலும் 5 நாட்கள் அவரை காவல் கட்டுப்பாட்டில் எடுத்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் அனுமதித்தது. இதனைத் தொடர்ந்து அமலாக்கத்துறையினர் நேற்று முன் தினம் செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்கத் தொடங்கியது. மேலும் 12ஆம் தேதி வரை விசாரணை நடைபெறும் என்று அமலாக்கத்துறை அறிவித்திருந்தது.
கரூர் சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஆண்டாங்கோயில் கிழக்கு ஊராட்சி மேலக்கரூர் சார் பதிவாளர் அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதியில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார், தன் மனைவி நிர்மலாவின் பெயரில் கட்டி வரும் புதிய பங்களா வீட்டில் அமலாக்கத்துறையினர் காலை முதல் சோதனையில் ஈடுபட்டனர். மேலும் அசோக்குமாரின் ஆடிட்டர் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. சோதனையின் முடிவில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் கட்டி வரும் வீட்டை முடக்கினர்.
மேலும் 2 ஏக்கர் 49.5 சென்ட் நிலத்தில், அசோக்குமாரின் மனைவி நிர்மலா பெயரில் கட்டப்பட்டு வரும் புதிய மாளிகை கட்டுமானப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளக் கூடாது என்றும், நிலத்தை வேறு ஒருவருக்கு விற்பதற்கோ தானமாக வழங்குவதற்கோ மேலக்கரூர் சார் பதிவாளர் அனுமதிக்கக் கூடாது என்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடிதம் வழங்கியுள்ளனர்.
நிலம் வாங்கியது தொடர்பாகவும், வீடு கட்டப்படுவது தொடர்பாகவும் சட்டவிரோதமான முறையில் பணப் பரிவர்த்தனை நடைபெற்ற ஆவணங்கள் சிக்கி உள்ளதால் வழக்கு முடியும் வரை வீடு கட்டும் பணியை முடக்கியும், நிலத்தை விற்கவும் தடை செய்து அமலாக்கத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
மேலும் நிர்மலாவுக்கு நிலத்தை தானமாக வழங்கிய அவரது தாய் லட்சுமி மற்றும் நிலத்தை லட்சுமிக்கு விற்ற தொழிலதிபரின் மனைவி அனுராதா ரமேஷ், ஆகியோர் சிட்டி யூனியன் வங்கி மூலம் மேற்கொண்ட பணப் பரிவர்த்தனை தொடர்பான முக்கிய ஆவணங்களில் தொடர்புடையவர்கள் என்பதால், அவர்களும் விசாரணை வளையத்திற்குள் விரைவில் கொண்டுவரப்பட உள்ளதாகத் தெரிகிறது.