தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சட்ட உலகில் தனிமுத்திரையைப் பதித்தவர் மூத்த வழக்கறிஞர் நடராஜன்.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

கீழமை நீதிமன்றங்கள் முதல் உச்சநீதிமன்றம் வரை தனது வாதத் திறமையால் சட்ட உலகில் தனக்கென தனிமுத்திரையைப் பதித்து நீங்காப் புகழ்பெற்றவராக விளங்கிக் கொண்டு இருக்கிறார் மூத்த வழக்கறிஞர் என்.நடராஜன் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

By

Published : Aug 14, 2022, 3:59 PM IST

சென்னை: கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற மூத்த வழக்கறிஞர் என்.நடராஜனின் திருவுருவப் படத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

பின்னர் அவர் பேசியதாவது, "இந்திய தண்டனைச் சட்டம், இந்திய அரசியல் சட்டம் உள்ளிட்ட அனைத்து சட்டங்களிலும் வல்லுநராக விளங்கிய நடராஜன், மறைந்த முதலமைச்சர் கருணாநிதியின் வழக்கறிஞராக பல வழக்குகளில் வாதாடி வெற்றி கண்டவர் நடராசன் என்றார். கீழமை நீதிமன்றங்கள் முதல் உச்சநீதிமன்றம் வரை தனது வாதத் திறமையால் சட்ட உலகில் தனக்கென தனிமுத்திரையைப் பதித்து நீங்காப் புகழ்பெற்றவராக விளங்கிக் கொண்டு இருக்கிறார்.

நீதித்துறைக்கு மட்டுமின்றி, திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் அனுபவமிக்க சட்ட நுணுக்கங்கள் தெரிந்த பல வழக்கறிஞர்களை உருவாக்கித் தந்த பெருமைக்குரியவர் அவர் என்பது எல்லோருக்கும் தெரியும். நீதியரசர்களுடைய நன்மதிப்பைப் பெற்றவராக விளங்கினார். இங்கே எல்லோரும் குறிப்பிட்டுச் சொன்னார்கள், மும்பை குண்டு வெடிப்பு. அந்த வழக்கில் அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டு வாதாடிய அவர், வழக்கறிஞர் தொழிலுக்கான நேர்மை, அறிவுக்கூர்மை, நம்பிக்கை என அனைத்தையும் தன்னகத்தே கொண்டவர்.

அதைப்போல, 1996-ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, அதற்கு முன்பிருந்த அதிமுக ஆட்சி காலத்து ஊழல்கள் தொடர்பாக, தனி நீதிமன்றங்கள் அமைக்கப்பட்ட வேண்டும் என்று முடிவெடுத்தபோது, சீரிய ஆலோசனைகளைச் சொன்னவரும் நடராஜன் அவர்கள் தான்.

சென்னை உயர்நீதிமன்றத்தில், கால் நூற்றாண்டு காலம் கொடிகட்டிப் பறந்த வழக்கறிஞர் நடராஜன். பின்னர் உச்சநீதிமன்றத்தில் வாதிடுவதற்காகச் சென்றார்கள். அப்போது, இந்தியாவின் புகழ்பெற்ற வழக்கறிஞரான ராம்ஜெத்மலானி ஒன்றை குறிப்பிட்டார்கள். 'தி கிரிமினல் லெஜெண்ட் ஃப்ரம் தமிழ்நாடு' என்று இவரைச் சொல்லி இருக்கிறார் என்றால் அந்தளவுக்கு இந்தியாவினுடைய புகழ் பெற்ற வழக்கறிஞராகத் திகழ்ந்தவர் நடராசன்.

மும்பை வெடிகுண்டு வழக்கில் சி.பி.ஐ தரப்பு வழக்கறிஞராக நடராஜன் நியமிக்கப்பட்டபோது பலரும் ஆச்சரியப்பட்டார்கள். சி.பி.ஐக்கு எதிரான வழக்குகள் பலவற்றில் ஆஜரான ஒரு வழக்கறிஞரை சி.பி.ஐ தனது தரப்பு வழக்கறிஞராக எப்படி நியமித்தது என்று எல்லோரும் கேட்டார்கள். மிகப்பெரிய வெடிகுண்டு வழக்கில் ஆஜராவதற்கு சரியான வழக்கறிஞர் இந்தியாவிலேயே நடராஜன்தான் என்று சி.பி.ஐ.யை ஒப்புக்கொள்ள வைக்கும் அளவுக்கு வாதத்திறமையை எடுத்து வைத்து அவர் வெற்றி கண்டார்.

இன்னும் சொல்ல வேண்டுமானால், அந்த வழக்கில் துளிகூட அச்சமில்லாமல் அவர் ஆஜரானார். அதேபோல் ராஜீவ்காந்தியினுடைய கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 26 பேருக்கு மரண தண்டனையை சி.பி.ஐ நீதிமன்றம் வழங்கியது. உச்சநீதிமன்றத்துக்கு மேல் முறையீடு செய்யப்பட்டபோது, இதில் 19 பேரை மரண தண்டனையில் இருந்து விடுவிக்கும் அளவுக்கு வாதங்களை வைத்தவர் நம்முடைய நடராஜன்" என்று குறிப்பிட்டு பேசினார்.

இதையும் படிங்க:பிரதமரை சந்திக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்

ABOUT THE AUTHOR

...view details