சென்னை: பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலச்சட்டம் மற்றும் மூத்த குடிமக்களுக்கான தேசியக் கொள்கை ஆகியவற்றை தமிழ்நாட்டில் அமல்படுத்த உத்தரவிடக்கோரி சி.குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், ''தங்கள் குழந்தைகளுக்காக வாழும் பெற்றோர்கள் வயதான காலத்தில் அநாதைகளாக பிள்ளைகளால் துரத்தப்படுவதும், வயதான காலத்தில் சாலை ஓரங்களில் பிச்சை எடுத்து வாழும் வாழ்க்கைக்கும் தள்ளப்படுகின்றனர். இதனால், பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் மத்திய அரசின் தேசியக் கொள்கைகளை தமிழ்நாட்டில் அமல்படுத்தி, மூத்த குடிமக்களுக்கு அவர்களுடைய இறுதிக் காலத்தில் பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும்'' எனக் குறிப்பிட்டு இருந்தார்.
இந்த மனு நேற்று (ஜூலை 8) சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ஏ. இளைய பெருமாள், அரசு தரப்பில் ப்ளீடர் பி.முத்துக்குமார் மற்றும் அரசு சிறப்பு வழக்கறிஞர் ஆர்.அனிதா ஆகியோர் ஆஜராகி தங்கள் வாதங்களை முன் வைத்தனர்.