சென்னை:சட்டவிரோதப் பணபரிமாற்றத் தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஜூன் 14ஆம் தேதி அதிகாலை அதிரடியாக கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவரிடம் இருந்த துறைகள் இரு அமைச்சர்களுக்கு மாற்றப்பட்டு, இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி செயல்படுவார் என தமிழ்நாடு அரசு அறிவித்தது.
இந்நிலையில், பணப் பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்ந்தால், விசாரணையில் பாதிப்பு ஏற்படும் என்பதால், இலாகா இல்லாத அமைச்சராகத் தொடர்ந்த செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்குவதாக இன்று (ஜூன் 29) தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவித்துள்ளார்.
விசாரணை நீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்படாத ஒருவரை, குற்றம் சுமத்தப்பட்டார் என்பதற்காக அமைச்சரவையில் இருந்து நீக்க முடியுமா? ஆளுநருக்கு அந்த அதிகாரம் தனிப்பட்ட முறையில் வழங்கப்பட்டுள்ளதா? ஆளுநரின் அதிகாரம் என்ன என வழக்கறிஞர்கள் தரும் கருத்துகளை விரிவாக இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்.
இதுகுறித்து மூத்த வழக்கறிஞர் சுரேஷ் கூறுகையில், “தமிழ்நாடு அமைச்சரவையின் முடிவில் தலையிட ஆளுநருக்கு அதிகாரம் இல்லை. அரசியல் காரணங்களுக்காக ஆளுநர் தனிப்பட்ட முறையில் அறிவித்துள்ளார். ஜனநாயக அடிப்படையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிகளை நீக்க முடியாது.
மாநில அரசின் பரிந்துரைகளை ஏற்று, வழிநடத்த மட்டுமே அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சிகளின் முடிவில் தலையிட உரிமை இல்லை. ஒருவர் குற்றவாளியாக இருந்தால் அவர்மீது நடவடிக்கை எடுக்கவோ? நீக்கவோ? நீதிமன்றங்களுக்குத்தான் அதிகாரம் உள்ளது.
மாநில அரசின் கட்டுப்பாட்டில் இல்லாமல் சட்டம் - ஒழுங்கு முழுவதுமாக மீறப்படும் போது, ஆளுநர் தன்னிச்சையாக நடவடிக்கை எடுக்கலாம். சட்டம் ஒழுங்கு முழுவதும் மீறப்பட்டு கலவரம் நடந்து வரும் மணிப்பூர் மாநிலத்தில் ஏன்? ஆளுநர் நடவடிக்கை எடுக்கவில்லை'' என்றார்.
தொடர்ந்து மூத்த வழக்கறிஞர் வில்சன் கூறுகையில், ''ஆளுநர் மத்திய அரசின் பிரதிநிதியாக செயல்படாமல், அரசியல் காரணங்களுக்காக மாநில அரசைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையை ஏற்க முடியாது. ஆளுநரின் அதிகாரம் மாநில அரசைக் கட்டுப்படுத்தாது. தன்னிச்சையாக எடுக்கப்படும் முடிவுக்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசு கட்டுப்பட வேண்டிய அவசியம் இல்லை.
செந்தில் பாலாஜி அமைச்சரவையில் அமைச்சராக தொடர்வதா? வேண்டாமா? என்பதை மாநில அரசு முடிவு செய்ய வேண்டும். அதிகாரம் இல்லாத ஆளுநர் பிறப்பித்த உத்தரவால் செந்நில் பாலாஜியை நீக்க முடியாது. செந்தில் பாலாஜி அமைச்சராகவே தொடருவார்'' என கருத்து தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து மூத்த வழக்கறிஞர் விஜயன் கூறுகையில், ''ஆளுநரின் முடிவு அரசியலமைப்புச் சட்டத்திற்கு புறம்பானது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தில் யாரை முதலமைச்சராக நியமிப்பது, அமைச்சராக நியமிப்பது என மாநில அரசு தான் முடிவு செய்யும். அவ்வாறு, மாநில அரசு முடிவு செய்யும் பிரதிநிதிகளை மாநில அரசின் பரிந்துரையை ஏற்று பதவிப்பிரமாணம் செய்யும் உரிமை மட்டுமே ஆளுநருக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஒருவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதற்காகவே ஆளுநரே தன்னிச்சையாக யாரையும் நீக்கிவிட முடியாது. யார் அமைச்சராக தொடர வேண்டும் அதற்கான காரணம் என்ன என விளக்கம் அளிக்க வேண்டிய அவசியமும் மாநில அரசுக்கு இல்லை. அமைச்சரவையில் இருந்து நீக்கும் அதிகாரத்தை பிரதமர் மற்றும் முதலமைச்சருக்கு உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது. மாநில அரசின் மீது நடவடிக்கை எடுக்கவோ? தன்னிச்சையாக முடிவுகளில் தலையிடவோ ஆளுநருக்கு அதிகாரம் இல்லை'' என்றார்.
இதையும் படிங்க:Senthil Balaji Dismiss: செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியிலிருந்து டிஸ்மிஸ் - ஆளுநர் உத்தரவு