சென்னை: செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு 7ஆவது அவென்யுவில் வசித்து வந்த 24 வயதான அருண்குமார் என்ற இளைஞர் தனியார் பிஸ்கட் நிறுவனத்தில் சேலஸ்மேனாக பணிபுரிந்து வருகிறார். கடந்த 16ஆம் தேதி இரவு சுமார் 10 மணியளவில் வழக்கம்போல் பணி முடிந்து வீட்டிற்குச் சென்ற அருண்குமார், வீட்டின் கீழ் அவரது விலை உயர்ந்த KTM பைக்கை நிறுத்திவிட்டு உறங்க சென்றுள்ளார்.
மறுநாள் 17ஆம் தேதி அதிகாலை 4:30 மணியளவில் தூக்கம் கலைய வெளியே வந்த அருண்குமாருக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் வீட்டின் வெளியே நிறுத்திவைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனம் காணாமல் போயிருந்தது தெரியவந்தது. பின்னர் அக்கம் பக்கத்தில் தேடியும் இருசக்கர வாகனம் கிடைக்காததால் அருகில் உள்ள செம்மஞ்சேரி காவல் நிலைய ஆய்வாளர் முருகனிடம் புகார் அளித்தார்.
புகாரை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த ஆய்வாளர் முருகன் தலைமையில் தனிப்படை அமைத்து இருசக்கர வாகன திருட்டு குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் கே.கே.சாலையில் நம்பர் பிளேட்டை கழட்டிவிட்டு வாகன பதிவு எண் இல்லாமல் மூன்று நபர்கள் அதிக வேகத்தில் சென்றதைக் கண்ட தனிப்படை காவல் துறையினர் அவர்களை மடக்கி விசாரித்தனர்.
அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் வாகன பதிவு எண்ணை கூறும்படி காவல் துறையினர் கேட்ட பின்பு, பதிவு எண் அவர்களில் யாருக்கும் தெரியாமல் முழித்ததால் சந்தேகமடைந்த காவல் துறையினர், வாகனத்தின் RC புக் கேட்டுள்ளனர். அதையும் இல்லை என்று கூறியதால் சந்தேகத்தின் அடிப்படையில் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் மூவரும் வந்த யமஹா R15 வாகனம் கடந்த ஆகஸ்ட் மாதம் 28ஆம் தேதி சென்னை மணலி புதுநகர் பகுதியில் திருடியதை ஒப்புக்கொண்டனர். பின்னர் அவர்களிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையில் அவர்கள் திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியைச் சேர்ந்த 24 வயதான இளவரசன், 24 வயதான யாழின்ராஜ், சென்னை செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பைச் சேர்ந்த 24 வயதான அசோக் என்பது தெரியவந்துள்ளது.
மேலும் இளவரசன் மீது திருச்சி மாவட்டம், துறையூர் காவல் நிலையத்தில் திருட்டு, வழிப்பறி, வீடு உடைப்பு உள்ளிட்ட வழக்குகளில் சிறை சென்று வந்ததும், ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்துவிட்டு திருட்டு தொழிலில் ஈடுபட்டு பலமுறை சிறை சென்று வந்ததும் தெரியவந்துள்ளது. செம்மஞ்சேரி, சுனாமி குடியிருப்பை சேர்ந்த அசோக் மீது அடிதடி, திருட்டு, வழிப்பறி, மிரட்டல், கத்தியால் வெட்டி பணம் பறிப்பு உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது. பலமுறை சிறை சென்றதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
திருச்சி துறையூரைச் சேர்ந்த யாழின்ராஜ் மீது கடந்த 2021-ஆம் ஆண்டு பெண்ணை கடத்திய வழக்கு, ஆள் கடத்தல் வழக்குகளில் சிறை சென்றதும், 12ம் வகுப்பு முடித்து விட்டு மருத்துவம் படிக்க பிலிப்பைன்ஸ் சென்று வந்ததும், கடைசியாக சுகாதார ஆய்வாளராக தேர்வு எழுதி அதில் தேர்ச்சி பெற்று பணி உத்தரவுக்காக காத்திருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், மூவரிடமும் தொடர்ந்து நடத்திய விசாரணையில் திருச்சியை சேர்ந்த இளவரசன், யாழின்ராஜ் இருவரும் சிறையில் இருக்கும்போது, உடன் சிறையில் இருந்த சென்னை செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பை சேர்ந்த அசோக்வுடன் பழக்கம் ஏற்பட்டது தெரியவந்துள்ளது.