சென்னை: கலைஞர்அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தினை சிறப்பாக ஒருங்கிணைத்துச் செயல்படுத்தும் விதமாக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் திட்டங்களுடன், வேளாண்மை-உழவர் நலத் துறையின்கீழ் செயல்படும் திட்டங்களை இணைத்துச் செயல்படுத்துவதற்கான, வழிமுறைகளை ஆராய்வதற்கான, மாநில அளவிலான ஒருங்கிணைப்பு கருத்தரங்கு நேற்று (பிப். 26) தலைமைச் செயலகத்தில், வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் தலைமையில் நடைபெற்றது.
இந்த ஒருங்கிணைப்புக் கருத்தரங்கில், தலைமைச் செயலாளர், அரசு முதன்மைச் செயலாளர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசுச் செயலாளர், வேளாண்மை-உழவர் நலத்துறை தலைவர்கள், தலைமைப் பொறியாளர்கள், வேளாண்மைப் பொறியியல் துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலாளர் அவரது உரையில், இரு துறைகளும் ஒருங்கிணைந்து செயல்படும்போது கிராமங்கள் தன்னிறைவு அடைவதுடன் ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சியையும் அடையும் எனக் கூறினார்.
ஊரக வளர்ச்சி, ஊராட்சித் துறையுடன் இணைய வேண்டும்
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை முதன்மை செயலாளரின் உரையில், கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு இவ்விரு துறைகளும் ஒன்றாகச் சேர்ந்திருந்ததையும், பின்னர் தனியாகச் செயல்பட்டு வருவது குறித்தும் கூறினார். தற்போது இவ்விரு துறைகளின் திட்டங்களை ஒருங்கிணைப்பதன் மூலம் திட்டப்பலன்கள் சீரிய முறையில் கிராம மக்களுக்கு விரைந்து சென்றடையும் எனவும் தெரிவித்தார்.