தமிழ்நாட்டில் கரோனா தொற்று பாதிப்பு காரணமாக அகில இந்தியத் தொழில்நுட்ப கல்வி கழகம் மற்றும் பல்கலைக்கழக மானியக் குழுவின் வழிகாட்டுதலின் அடிப்படையில் உயர் கல்வியில் பயிலும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பருவ தேர்வுகள் நடத்தப்பட்டன. வினாத்தாள்கள் ஆன்லைன் மூலம் அனுப்பப்பட்டு மாணவர்கள் வீட்டிலிருந்தே எழுதும் வசதி ஏற்படுத்தப்பட்டது.
மாநிலத்தில் தற்போது கரோனா தொற்று குறைந்துவரும் நிலையில், அனைத்து மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் சுழற்சி முறையில் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் நவம்பர், டிசம்பர் மாதத்திற்கான பருவத்தேர்வு விரைவில் நடைபெற உள்ளது. இந்தமுறையும் தேர்வை நேரடியாக நடத்தாமல் ஆன்லைன் மூலம் நடத்த வேண்டுமென மாணவர்கள் சிலர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மேலும் தனியார் கல்லூரிகளும், ஆன்லைன் மூலம் தேர்வு நடத்த வேண்டும் எனக் கோரிக்கை வைத்து வருகிறது. இந்நிலையில், பொறியியல் மாணவர்களுக்கான பருவத் தேர்வுகள் அடுத்த மாதம் 13 ஆம் தேதி முதல் நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அதேபோல் பிற பல்கலைக்கழகங்களும் தங்கள் மாணவர்களுக்கான பருவத் தேர்வுகள் நடத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றன.
இதற்கிடையில் உயர்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் கார்த்திகேயன் தொழில்நுட்ப கல்வி இயக்குனர், கல்லூரி கல்வி இயக்குனர் அனைத்து பல்கலைக்கழகங்களில் பதிவாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், "உயர்கல்வித் துறையின் கீழ் செயல்படும் அனைத்து கல்வி நிறுவனங்களும், மாணவர்களுக்கான தேர்வினை நேரடியாக மட்டுமே நடத்த வேண்டும். தமிழ்நாட்டில் தற்போது கரோனா வைரஸ் தொற்று பாதிப்பின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
எனவே கல்வி நிறுவனங்கள் கரோனா பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றித் தேர்வுகளைக் கண்டிப்பாக நேரடியாக மட்டுமே நடத்த வேண்டும். அனைத்து பாலிடெக்னிக் கல்லூரிகள், கலை அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகத் துறைகள் என அனைத்தும் இதனை பின்பற்ற வேண்டும்" எனக் கூறியுள்ளார்.
இதையும் படிங்க:நீட் தேர்வு: தமிழ்நாடு அரசுப் பள்ளி மாணவர்கள் தேர்ச்சி விகிதம் உயர்வு!