அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறித்து, பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ராமேஸ்வர முருகன் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:
2018-19ஆம் கல்வியாண்டு முடிவடையும் நேரத்தில் இருக்கிறோம். பொதுவாக அடுத்தக் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை அந்தக் கல்வி ஆண்டின் தொடக்கத்தில் ஜூன் மாதம் மேற்கொள்வது வழக்கமாக உள்ளது. ஆனால், தனியார் கல்வி நிறுவனங்கள் நடப்பு கல்வி ஆண்டின் இறுதியில் குறிப்பாக ஏப்ரல் மாதத்திற்குள்ளாகவே மாணவர் சேர்க்கைக்கான நடவடிக்கைகளை முடித்துவிடுகின்றனர்.
பெற்றோரும் தாம் விரும்பும் கல்வி நிறுவனங்களில் இடம் கிடைக்குமோ, கிடைக்காதோ என்ற ஐயப்பாட்டில் முதலில் மாணவர் சேர்க்கையை தொடங்கும்போது அருகில் உள்ள ஏதேனும் ஒரு பள்ளியில் தங்கள் பிள்ளைகளின் சேர்க்கை உறுதி செய்துகொள்கின்றனர்.
அரசுப் பள்ளியில் மாணவர் சேர்க்கை தொடங்குவதற்கு முன்பாகவே இந்தச் சேர்க்கை நடந்துவிடுகிறது.
எனவே நடப்புக் கல்வி ஆண்டின் இறுதியில் ஏப்ரல் 1ஆம் தேதியிலிருந்து எல்.கே.ஜி. முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கைக்கான நடவடிக்கைகளை எடுத்தால், அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் வெகுவாக அதிகரிக்கும் சூழ்நிலை ஏற்படும்.
எனவே, 2019- 20ஆம் கல்வி ஆண்டு முதலாக மாணவர் சேர்க்கையை ஏப்ரல் மாதம் ஒன்றாம் தேதி தொடங்க வேண்டும். மாணவர் சேர்க்கை எல்.கே.ஜி., யு.கே.ஜி. தொடங்கி பன்னிரெண்டாம் வகுப்பு வரை உள்ள அனைத்து வகுப்புகளுக்கும் நடத்தப்பட வேண்டும். சேர்க்கைப் பதிவின்போது எல்லா சான்றிதழ்களையும் பெற வேண்டும் என்பது அவசியமில்லை, பின்னால் வழங்கினால் கூட போதுமானது.
மாணவர் சேர்க்கையை கல்வித் தகவல் மேலாண்மை முறைமை இணையதளத்தில் பதிவுசெய்ய வேண்டும். எல்.கே.ஜி., யு.கே.ஜி. சேர்க்கைக்கான வயதுவரம்பு, பிற நிபந்தனைகள் வழக்கம்போல் பின்பற்ற வேண்டும்.
பதினொன்றாம் வகுப்பிற்கான மாணவர் சேர்க்கையும் ஏப்ரல் முதல் நாள் தொடங்கிக் கொள்ளலாம். பத்தாம் வகுப்பிற்கான தேர்ச்சி, மதிப்பெண் சான்றிதழ் அடிப்படையில் அந்த மாணவருக்கு பிரிவுகள் ஒதுக்கப்பட வேண்டும். இதனடிப்படையில் அரசுப் பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கான நடவடிக்கைகள் விரைந்து தொடங்க வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை தொடர்ந்து சரிந்துவரும் நிலையில், பள்ளிக் கல்வித் துறையின் இந்த நடவடிக்கை எந்தளவு பயனளிக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.