சென்னை:தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவிக்காக ஆசைப்பட்டு செல்வபெருந்தகை கட்சியில் பிளவு ஏற்படுத்த நினைக்கிறார், எனவே அவர் மீது விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி எஸ்சிஎஸ்டி பிரிவு தலைவர் ரஞ்சன் குமார் குற்றம் சாடியுள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் கடந்த 15-ம் தேதி நடந்த மோதல் சம்பவம் குறித்து, ஒழுங்கு நடவடிக்கை குழுவின் விசாரணைக்கு அக்கட்சி எஸ்.சி.பிரிவு தலைவர் ரஞ்சன் குமார் ஆஜரானார். விசாரணைக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர்,"என் மீது நேரடியாக யாரும் குற்றச்சாட்டு வைக்கவில்லை.
சம்பவ நேரத்தில் அங்கு இருந்ததால் அங்கு என்ன நடந்தது என்று என்னை கேட்டார்கள். நான் அதை தெளிவாக எடுத்துரைத்தேன். இதற்கு காரணம் என்னவென்று எனக்குத் தெரிந்த அளவு தெரிவித்தேன்.
இந்த மோதலுக்கு பின்னால் ரூபி மனோகரன் இருப்பதாக தெரிவிக்கிறார்கள். ஆனால் இதற்கு பின்னால் செல்வபெருந்தகை இருக்கிறார். நான் ஏன் இந்த குற்றச்சாட்டை வைக்கிறேன் என்றால், அவர் வரலாற்றை பார்த்தால் அவர் இருந்த கட்சிகளில் இது போன்று செயல்களில் அவர் ஈடுபட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சியில் இரண்டாம் கட்ட தலைவராக வந்துள்ளார். தலைவர் பதவிக்கு வர வேண்டும் என்பதற்காக இதுபோன்று செயல்களில் அவர் ஈடுபட்டுள்ளார். காங்கிரஸில் பிளவு ஏற்படுத்த நினைக்கிறார். மற்ற தலித் கட்சிகளில் செய்தது போன்று இங்கு கட்சியை பிளக்க நினைத்தால் அது நிறைவேறாது. செல்வப் பெருந்தகை மீது விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என்பது என்னுடைய கோரிக்கை. இதனை விசாரணையின் போது தெரிவித்தேன்.
அழகிரி தலைமையிலான காங்கிரஸ் கட்சியில் எந்த ஒரு கோஷ்டி மோதலும் இல்லாமல் இருந்தது. அவர் தலைமையில் கட்சி சிறப்பாக சென்று கொண்டு இருக்கிறது, எனவே அவர் தொடர்ந்து அப்பதவியில் இருப்பார் என்ற பயம் செல்வப் பெருந்தைக்கு வந்துவிட்டது. அதனால் அவர் தலைமையில் சட்ட ஒழுங்கு சரியில்லை என்பதை பிரதிபலிப்புக்காக இது போன்று கோஷ்டி மோதல் நடத்தியுள்ளார்.
செல்வபெருந்தகைக்கு பின்னால் இருக்கக்கூடிய முன்னாள் மாநில தலைவர்கள் விரைவில் புரிந்து கொள்வார்கள். காலம் பதில் சொல்லும். ரூபி மனோகர் தரப்பிலிருந்து எனக்கு தொலைபேசி மூலமாக மிரட்டல் வந்தது, நான் எதற்கும் அஞ்ச மாட்டேன். என் மீது எந்த தவறும் இல்லை" என தெரிவித்தார்.
இதையும் படிங்க:மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு - சஸ்பெண்ட் குறித்து ரூபி மனோகரன் கருத்து!