சென்னை:மெரினா நீச்சல் குளம் அருகே இன்று (மே 25) அதிகாலை 4 மணியளவில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது சந்தேகத்துக்கு இடமான வகையில், இருவர் கஞ்சா புகைத்துக் கொண்டிருந்தனர். இருவரையும் பிடித்து போலீசார் விசாரித்த போது, முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். மேலும் அதில் ஒருவர் 18 வயதுக்கும் குறைவான சிறுவன் என்பது தெரியவந்தது.
போலீசாருக்கு சந்தேகம் வலுக்கவே, இருவரையும் அண்ணா சதுக்கம் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையின் அடிப்படையில், இருவரும் திருநின்றவூர் நடுக்குத்தகை பகுதியை சேர்ந்த பிரபல பைக் திருடன் (17 வயது சிறுவன்) என்பதும், அவனது கூட்டாளி சத்ய பிரதீப்(20) என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
திருநின்றவூரில் இருசக்கர வாகனத்தை திருடிவிட்டு, எழும்பூர் பகுதியில் அதை விற்பனை செய்வதற்காக கொண்டு வந்ததாக இருவரும் போலீசாரிடம் தெரிவித்தனர். வரும் வழியில் பூந்தமல்லி, நசரத்பேட்டை உள்ளிட்ட மூன்று இடங்களில் செல்போன்களை வழிப்பறி செய்ததையும் ஒப்புக்கொண்டனர். தொடர்ந்து இருவரிடமும் போலீசார் நடத்திய விசாரணையில், இருசக்கர வாகனத்தை திருடிய பிறகு, சத்யா நகரில் கஞ்சா வாங்கியதும் அம்பலமாகியுள்ளது.
பிரபல பைக் திருடனான 17 வயது சிறுவன் பகல் நேரங்களில் புட்லூர் - ஆவடி மார்க்கத்தில் இயங்கும் ரயில்களில் சமோசா விற்பனை செய்து வந்துள்ளான். பகல் நேரம் முழுவதும் பல இடங்களை நோட்டமிடும் அவன், இரவு நேரங்களில் கூட்டாளிகளுடன் சேர்ந்து இருசக்கர வாகனங்களை திருடுவதை தொழிலாகக் கொண்டவன் என போலீசார் தெரிவித்தனர். ஏற்கனவே அவன் மீது கொரட்டூர், மணலி, செவ்வாப்பேட்டை காவல் நிலையங்களில் இருசக்கர வாகனங்கள் திருட்டு தொடர்பான வழக்குகள் இருப்பதாகவும் போலீசார் குறிப்பிட்டனர். தீவிரமாக அவனை தேடிய நிலையில் தற்போது அவன் சிக்கியிருப்பதாக கூறினர்.
இதையும் படிங்க: அலுவலகம் அமைத்து லாட்டரி விற்பனை - நடவடிக்கை எடுக்குமா போலீஸ்!
இதே போல சத்ய பிரதீப் மீது அடிதடி, வழிப்பறி என 5 வழக்குகள் பல்வேறு காவல் நிலையங்களில் நிலுவையில் இருப்பதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதைத் தொடர்ந்து இருவரிடம் இருந்தும் இருசக்கர வாகனம், 3 செல்போன்களை பறிமுதல் செய்த அண்ணா சதுக்கம் போலீசார், அவர்களை திருநின்றவூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். பின்னர் இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களது கூட்டாளிகள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கஞ்சாவை விற்பனை செய்தது யார் என்பது பற்றியும் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: சிறுமிக்கு பாலியல் தொல்லை.. மருத்துவமனையில் இருந்து காமுகன் தப்பியோட்டம்.. சென்னையில் நடந்தது என்ன?