திருவண்ணாமலை:தமிழ்நாட்டில் வேலூர் உள்ளிட்டப் பகுதிகளில் மோசடி கும்பல் ஒன்று, ஐஆர்சிடிசி இணையத்துக்குள் சென்று, ஆன்லைனில் விரைவாக டிக்கெட்களை முன்பதிவு செய்தும், அதை நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக ரூ.200 முதல் ரூ.300 வரை விற்பனை செய்வதாகவும் ரயில்வே துறைக்கு புகார்கள் வந்தன.
இதன் அடிப்படையில், குற்றவாளிகளை கைது செய்ய ரயில்வே காவல்துறை தரப்பில் விழுப்புரம் ஆய்வாளர் அருண் குமார், திருவண்ணாமலை உதவி ஆய்வாளர் ஆதித்யா குப்தா ஆகியோர் அடங்கிய 8 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வேலூர், காட்பாடி பகுதிகளில் உள்ள 5 கடைகளில் ரயில்வே தனிப்படை போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, சாஃப்ட்வேரை பயன்படுத்தி ஐஆா்சிடிசி இணையதளத்திற்குள் சென்று விரைவாக டிக்கெட் முன்பதிவு செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், போலியான சாஃப்ட்வேர் மூலம் மோசடி அரங்கேற்றப்பட்டது வெளிச்சத்துக்கு வந்தது.
மேலும் பீகாரை சேர்ந்த நபர், போலியான சாஃப்ட்வேரை விற்பனை செய்வதும் கண்டறியப்பட்டது. இதையடுத்து கடந்த ஆண்டு செப்டம்பர் 9ம் தேதி, பீகாருக்கு விரைந்த தனிப்படை போலீசார் தானாபூரை சேர்ந்த சைலேஷ் யாதவை கைது செய்தனர். வேலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் சிறையில் அடைக்கப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், TATKAL SOFTWARE ALL.IN என்ற இணையதளத்தை உருவாக்கி, சுமார் பத்துக்கும் மேற்பட்டவர்களிடமிருந்து ஐஆா்சிடிசி சாஃப்ட்வேருக்குள் சென்று டிக்கெட் முன்பதிவு செய்வது போல், கூடுதல் விலைக்கு டிக்கெட்டை விற்றது அம்பலமானது.