சென்னை: இந்து திருமணச்சட்டம் 7(A) படி சுயமரியாதை திருமணங்களை வழக்கறிஞர் முன்னிலையில் நடத்த எந்த தடையும் இல்லை என உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது. அதேநேரம், ரகசியமாக நடைபெறும் சுயமரியாதை திருமணங்கள் செல்லுமா? என்பதையும் உச்சநீதிமன்றம் அதன் தீர்ப்பில் தெளிவுபடுத்தி உள்ளது.
சுயமரியாதை திருமணம் :திருமணங்களின் போது நடைபெறும் சடங்குகள் மற்றும் மந்திரங்கள் இல்லாமல், விருப்பமான நபர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெறுதை சுயமரியாதை திருமணம் அங்கீகரிக்கிறது. மேலும், சிறப்பு திருமண சட்டம் 1954ன் படி வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்களும் திருமணம் செய்து கொள்வதை அங்கீகரிக்கிறது.
பின்னர், 1955ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட இந்து திருமணச் சட்டத்தில், 1967ஆம் ஆண்டு தமிழக முதலமைச்சராக இருந்த அண்ணா, திருத்தம் கொண்டு வந்தார். சட்டப் பிரிவு 7(a)ன் படி மனம் ஒன்றி திருமணம் செய்து கொள்ளும் நபர்கள் தங்களை கணவன் - மனைவியாக அங்கீகரிக்க உறவினர்கள், நண்பர்கள், தெரிந்தவர்கள் யாராவது ஒருவர் முன்னிலையில் எளிமையான முறையில் சடங்குகள் இல்லாமல் திருமணம் செய்து கொள்ளலாம். சுயமரியாதை திருமண சட்டம் அதற்கு சட்டரீதியான அங்கீகாரம் அளிக்கிறது.
உயர் சாதியினருக்கு எதிராக, தாழ்த்தப்பட்டவர்களின் உரிமைகளை மீட்டெடுக்க தந்தை பெரியார் சுயமரியாதை இயக்கத்தை தொடங்கினார். பெரியாரின் நோக்கத்தை புரிந்து சுயமரியாதை திருமணத்துக்கு சட்டரீதியான அங்கீகாரம் கிடைக்க சட்டத்திருத்தம் மூலம் அறிஞர் அண்ணா நடவடிக்கை மேற்கொண்டார்.
சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு : கடந்த 2014ஆம் ஆண்டு இளவரசன் என்பவர் தனது மனைவியை பெற்றோரிடம் இருந்து மீட்டுத்தரக்கோரி தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம், பொதுவெளியில் யாருக்கும் தெரியாமல் வழக்கறிஞர் முன்னிலையில் நடைபெற்ற திருமணத்தை செல்லாது என உத்தரவிட்டது.
மேலும், 2013ஆம் ஆண்டு சென்னை ராயபுரத்தில் பதிவு செய்யப்பட்ட 3 ஆயிரத்து 313 திருமணங்களில் ஆயிரத்து 937 திருமணங்கள் வழக்கறிஞர்கள் அலுவலகத்தில் நடைபெற்றது. திருமணம் முடந்ததும் தங்களை சேர்த்து வைக்கக்கோரி ஆண்கள் தொடரும் வழக்கில், நீதிமன்றத்தில் ஆஜராகும் பெண்கள் திருமணமே நடைபெறவில்லை எனக் கூறினர். அதனால், வழக்கறிஞர்கள் முன்னிலையில் ரகசியமாக நடைபெறும் திருமணங்கள் இந்த திருமண சட்டம் 7 மற்றும் 7(a)ன் படி செல்லாது என உத்தரவிட்டது.
உச்சநீதிமன்றதின் தீர்ப்பு :சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், சுயமரியாதை திருமணம் செய்ய புரோகிதர்கள் தேவை இல்லை. அனைவருக்கும் அறிவித்து திருமணங்கள் செய்தால் அது சுயமரியாதை திருமணத்தின் நோக்கத்தையே சீரழித்துவடும். அதனால், சுயமரியாதை திருமணம் செய்ய விரும்புவோர் தாங்கள் கணவன் மனைவியாக இனி வாழப்போகிறோம் என அறிவிக்க ஒருவர் சாட்சியாக இருந்தால் போதும்.