சென்னை:சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை சரி செய்ய, செங்கல்பட்டு மாவட்டம் சென்னை புறநகர் பகுதியான வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கத்தில், ஒரே வளாகத்தில் அனைத்து அரசு, தனியார் பேருந்துகளையும் இயக்கும் வசதிகளுடன் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது.
இந்த பேருந்து நிலையம் சுமார் 395.74 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழாவிற்காக காத்திருக்கிறது. இந்நிலையில், அமைச்சர் சேகர்பாபு, துறை அதிகாரிகளுடன் இன்று கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக, பணிகள் எவ்வளவு விரைவாக முடிக்கப்படும் என ஒப்பந்ததாரர்களுடனும், அதிகாரிகளுடனும் கலந்தாலோசித்தார்.
சாலைப் பணிகள் குறித்த காலத்தில் முடிக்காத ஒப்பந்ததாரர்களை துறை செயலாளர் அபூர்வா கண்டித்தார். இதன் பின்னர், ஜிஎஸ்டி சாலையில் நடைபெறும் மழைநீர் வடிகால் பணிகளை அமைச்சர், அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்தார். இதனை அடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, “இன்று கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகள், 3 அணுகு சாலைகளை அமைக்கும் பணி, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் வளைவு அமைக்கின்ற பணி, பேருந்து நிலையத்தில் காவல் நிலையம் அமைக்க வேண்டிய பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டேன்.
அந்த வகையில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் 17 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட உள்ள மழைநீர் கால்வாய், வெளிவட்ட சாலை - முடிச்சூர் ரோட்டில் அமைய இருக்கின்ற 29 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான ஆம்னி பேருந்து நிறுத்தம், பேருந்து நிலையத்தில் 16 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள காவல் நிலையம் ஆகியவற்றை ஆய்வு மேற்கொண்டேன்.
இதையும் படிங்க: “எங்கள் தோழில் சவாரி செய்த கட்சிதான் பாஜக” - அதிமுக அமைப்புச் செயலாளர் கோகுல இந்திரா
மேலும், ஐயன்சேரி மற்றும் மீனாட்சிபுரம் சாலை விரிவாக்கப் பணிகள் 7.56 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு வருகிறது. போலீஸ் அகாடமி சாலை - கூடுவாஞ்சேரி - ஊனமாஞ்சேரி பகுதியில் 6.15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சாலைப் பணி நடைபெற்று வருகிறது. கூடுவாஞ்சேரி, மண்ணிவாக்கம் மற்றும் ஆதனூர் சாலையில் 2.90 கோடி ரூபாயில் நடைபெற்று வரும் சாலைப் பணிகளை ஆய்வு மேற்கொண்டேன்.