சென்னை:இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் செயல்பாடுகள், சட்டமன்ற அறிவிப்புகளின் பணி முன்னேற்றம் குறித்த 27வது மாதாந்திர சீராய்வுக் கூட்டம் நேற்று (அக்.17) நடைபெற்றது. இதில் சுற்றுலா, பண்பாடு துறை முதன்மைச் செயலாளர் மணிவாசன், இந்து சமய அறநிலையத்துறை சிறப்பு பணி அலுவலர், ஆணையர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், “இந்து சமய அறநிலையத்துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும், 2021 - 2022, 2022 – 2023 மற்றும் 2023 – 2024ஆம் நிதியாண்டுகளில் சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளின் பணி முன்னேற்றம் குறித்தும் கூட்டத்தில் விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.
1,000 ஆண்டுகள் பழமையான திருக்கோயில் திருப்பணிகள், கிராமப்புற, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பகுதியிலுள்ள திருக்கோயில்களின் திருப்பணிகள், கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள 100 ஆண்டுகள் பழமையான திருக்கோயில்களை புனரமைக்க வழங்கப்பட்ட ரூ.30 கோடி நிதியில் மேற்கொள்ளப்படும்.
தமிழ்நாடு முழுவதும் 121 திருக்கோயில்களில் அமைந்துள்ள 125 பசுமடங்களை மேம்படுத்திட வழங்கப்பட்ட ரூ.20 கோடி நிதியில் நடைபெற்று வரும் பணிகளின் முன்னேற்றம், கோயில் பதாகை, திருவரங்கம் மற்றும் குணசீலத்தில் இந்த ஆண்டு அமைக்கப்பட்டு வரும் பசுமடங்கள் ஆகியவை குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
திருக்கோயில்களுக்கு புதிய 71 மரத்தேர்கள், 5 வெள்ளித்தேர்கள் மற்றும் 3 தங்கத்தேர்கள் உருவாக்கும் பணிகள், மரத்தேர் மராமத்துப் பணிகள், திருக்குளங்கள் மற்றும் நந்தவனங்களை சீரமைத்தல், புதிய ராஜகோபுரங்களை கட்டும் பணிகள், பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணிகள் ஆகிய பணிகளின் தற்போதைய நிலை குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.
பணி நியமனம், பதவி உயர்வு: திமுக அரசு பொறுப்பேற்றபின், 11 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த 539 அலுவலர்களின் பதவி உயர்வு உடனடியாக வழங்கப்பட்டது. காலிப் பணியிடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாகவும், கருணை அடிப்படையிலான பணி நியமனங்கள் மூலமாகவும், திருக்கோயில்கள் மூலம் விளம்பரப்படுத்தி நேர்முகத் தேர்வு நடத்தியும் நிரப்பப்படுகின்றன.
அவசர பணிகளை மேற்கொள்ள ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக பணியாளர்களை தேர்வு செய்கிறோம். கடந்த வாரம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் தேர்வு செய்யப்பட்ட 81 இளநிலை உதவியாளர்களுக்கும், 100 தட்டச்சர்களுக்கும் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.
திருக்கோயில்களில் இதுவரை 100 நபர்களுக்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. இந்து சமய அறநிலையத் துறையில் பெரியளவில் பணியாளர் பற்றாக்குறை இல்லை. இது போன்ற துறை அலுவலர்களின் கூட்டம், திருமண நாட்கள் மற்றும் பண்டிகை நாட்கள் தவிர்த்து மாதம் ஒரு முறை கூட்டப்படுகிறது.