தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குன்றத்தூரில் 2 டன் அளவிலான செம்மரம் பறிமுதல் - 2 tonnes of timber worth Rs 2 crore seized

குன்றத்தூர் அருகே குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.2 கோடி மதிப்புள்ள 2 டன் செம்மரக் கட்டைகள் வனத்துறை அலுவலர்களால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

குன்றத்தூரில் 2 டன் அளவிலான செம்மரம் பறிமுதல்
குன்றத்தூரில் 2 டன் அளவிலான செம்மரம் பறிமுதல்

By

Published : Oct 7, 2021, 9:55 PM IST

சென்னை: குன்றத்தூர் அடுத்த நந்தம்பாக்கம், சுபாஷ் சந்திரபோஸ் தெருவிலுள்ள ஒரு குடோனில் செம்மரக்கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வந்த தகவலையடுத்து நுண்ணறிவுப் பிரிவின் உதவி வனப்பாதுகாவலர் மகேந்திரன், சென்னை வன காவல் நிலையத்தின் வனச்சரக அலுவலர் ராஜேஷ் ஆகியோர் தலைமையிலான வனத்துறை அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

அப்போது அங்கு பூட்டப்பட்டு இருந்த குடோனின் பூட்டை உடைத்து, உள்ளே சென்று பார்த்தபோது, சுமார் 2 டன் மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் ஏற்றுமதி செய்வதற்காக, தயார் நிலையில் கோணிப்பையால் சுத்தப்பட்டிருந்தது. இதையடுத்து செம்மரக்கட்டைகளைப் பறிமுதல் செய்த வனத்துறை அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணை

விசாரணையில் நந்தம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவருக்குச் சொந்தமான குடோனை, கடந்த 10 மாதங்களுக்கு முன்பு, மதுரவாயலைச் சேர்ந்த அமீர் என்பவர், ஷோபா மற்றும் மெத்தைகள் தயாரித்து ஏற்றுமதி செய்வதற்காக, இந்த குடோனை வாடகைக்கு எடுத்து வந்தது தெரியவந்தது.

கடந்த சில மாதங்களாக வாடகை தரவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் தலைமறைவாக உள்ள அவரை காவல் துறையினர் தீவிரமாகத் தேடி வந்துள்ளனர்.

இந்தப் பகுதியில் இருந்து 2 டன் செம்மரக்கட்டைகள், கட்டைகளை அறுக்க பயன்படுத்தும் இயந்திரம், எடை அறியும் இயந்திரம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக்கட்டை மதிப்பு சுமார் ரூ.2 கோடி வரை இருக்கும் என வனத்துறை அலுவலர்கள் தெரிவித்தனர். பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக்கட்டைகள் அனைத்தும் ஸ்ரீபெரும்புதூர் வனத்துறை அலுவலர்களிடம் ஒப்படைக்கப்படும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சென்னையில் நிலத்தடி நீர் மட்டம் உயர்வு

ABOUT THE AUTHOR

...view details