சென்னை:சர்வதேச விமான நிலையத்தில் நேற்று (அக் 31) இரவு மத்திய தொழிற்பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது டிரான்சிட் பயணிகளுக்கான கழிவறைக்குள் சென்ற சென்னை விமான நிலையத்தில் தனியார் ஒப்பந்த ஊழியர்களாக பணியாற்றும் வெங்கடேஸ்வரன் (வயது 30), மதிநுல்லா (வயது 28) ஆகிய இருவரும் நீண்ட நேரமாக கழிவறைக்குள் இருந்ததாக கூறப்படுகிறது.
இதை கண்காணித்த மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்களுக்கு இருவரின் நடவடிக்கைகள் மீது சந்தேகம் ஏற்படுபட்டு உள்ளது. இதையடுத்து அவர்கள் இரண்டு பேரையும் அதிகாரிகள் விசாரித்த போது இருவரும் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததாக கூறப்படுகிறது. இதனால் சந்தேகம் அடைந்து மத்திய தொழிற்பாதுகாப்பு படை வீரர்கள் இரண்டு பேரையும் அலுவலகத்திற்கு அழைத்து சென்று, முழுமையாக சோதனை செய்து உள்ளனர்.
அப்போது இருவரும் அணிந்து இருந்த ஷூ, சாக்ஸ்க்குள் மறைத்து வைத்து இருந்த 8 பார்சல்களை வீரர்கள் கண்டுபிடித்து உள்ளனர். அந்த பார்சலை பிரித்து பார்த்த போது அதிலிருந்த ஒரு கிலோ 902 கிராம் ஏறத்தாழ 2 கிலோ தங்க பசைகள் இருந்தது கண்டறியப்பட்டு உள்ளது . அதன் சர்வதேச மதிப்பு 1 கோடியே 25 லட்ச ரூபாய் என தெரியவந்துள்ளது.
இதையடுத்து இருவரிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதோடு விமான நிலையத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது துபாயில் இருந்து, இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் சென்னைக்கு வந்த, இலங்கையைச் சேர்ந்த முகமது குதாஸ் (வயது 36) என்ற பயணி தங்கப் பசையை கடத்தி வந்தது தெரியவந்தது.