சென்னை: சென்னை சர்வதேச விமான நிலையத்தில் நேற்று (அக்.18) அதிகாலை, வழக்கம்போல் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது சென்னை சர்வதேச விமான நிலையம் புறப்பாடு பகுதியில் உள்ள டிரான்சிட் பயணிகளுக்கான கழிவறைக்குள் சென்ற, விமான நிலையத்தில் உள்ள தனியார் உணவு நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வரும் மணிவண்ணன் (30), நீண்ட நேரம் கழித்து வெளியே வந்துள்ளார்.
இதை கண்காணித்த மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் சந்தேகத்தில், அந்த ஒப்பந்த ஊழியர் மணிவண்ணனை பின் தொடர்ந்து கண்காணித்துள்ளனர். அதன் பின்னர் மணிவண்ணன் விமான நிலையத்தை விட்டு, அவசரமாக வெளியே செல்ல முயன்றுள்ளார். உடனே கேட்டில் அவரை தடுத்து நிறுத்திய மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள், அவரை விசாரணை செய்துள்ளனர்.
அப்போது அவர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்ததால், விமான நிலையத்தில் உள்ள ஒரு அறைக்கு அழைத்துச் சென்று முழுமையாக பரிசோதித்துள்ளனர். அப்போது அவருடைய உள்ளாடைக்குள் ஒரு பார்சல் இருந்தது தெரிய வந்துள்ளது. பின்னர், அந்த பார்சலை எடுத்து பிரித்து பார்த்தபோது, அதற்குள் முட்டை வடிவில் 8 பிளாஸ்டிக் பவுச்கள் இருந்துள்ளன.
அதைத் திறந்து பார்த்தபோது, அதனுள் தங்கப்பசை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள், மணிவண்ணனிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். அதோடு விமான நிலையத்தில் உள்ள ரகசிய கண்காணிப்பு கேமரா காட்சிகளின் பதிவுகளையும் ஆய்வு செய்தனர்.