சென்னை: எத்தியோப்பியா நாட்டின் தலைநகர் அடிஸ் அபாபாவிலிருந்து நேற்று (டிச.15) எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. விமானத்தில் வரும் பயணி பெரிய அளவில் போதைப்பொருட்களை கடத்தி வருவதாக விமான நிலைய வான் நுண்ணறிவு சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் அடிப்படையில் விமான நிலையம் முழுவதும் சுங்கத்துறை அதிகாரிகளின் தனிப்படையினர், பயணிகளிடம் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது நைஜீரியன் நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் விசாவில் வந்த 28 வயதுடைய இளைஞர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி உள்ளனர். இந்த விசாரணையில், அவர் தாம் ஆராய்ச்சி மேல்படிப்பிற்காக வந்ததாகவும், மருத்துவ பரிசோதனைக்கு வந்ததாகவும் மாறி மாறி கூறியுள்ளார்.
இதையடுத்து, சுங்கத்துறை அதிகாரிகள் அவரை தனி அறைக்கு அழைத்துச் சென்று எக்ஸ் ரே எடுத்து, அவரை முழுமையாக பரிசோதித்துள்ளனர். அதில், அவருடைய வயிற்றுக்குள் ஏராளமான கேப்சூல் மாத்திரைகளை விழுங்கி வந்திருப்பது தெரிய வந்துள்ளது. இதனால், அவரை விமான நிலைய மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று இனிமா கொடுத்து, வயிற்றுக்குள் இருந்த 71 கேப்சூல்களை வெளியே எடுத்து பிரித்து பார்த்ததில், அதில் போதப்பொருள் இருப்பது தெரிய வந்துள்ளது.