சென்னை: நடிகை விஜயலட்சுமி கடந்த 2011ஆம் ஆண்டு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது கொடுக்கப்பட்ட பாலியல் புகாரின் அடிப்படையில் அவர் மீது ஆறு பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்பு அந்த வழக்கின் மீது விசாரணை வேண்டாம் என விஜயலட்சுமி கடிதம் எழுதிக் கொடுத்த பிறகு அந்த வழக்கை போலீசார் கைவிட்டனர்.
இந்த நிலையில் மீண்டும் சீமான் தன்னை ஏமாற்றி விட்டதாக அவர் மீது பதியப்பட்ட பழைய வழக்கை மீண்டும் விசாரணை செய்ய வேண்டும் என்று விஜயலட்சுமி மீண்டும் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பிறகு அவரிடம் விசாரணைகள் நடத்தப்பட்டு விவரங்கள் பெற்ற பிறகு கடந்த சனிக்கிழமை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் சீமான் ஆஜராகும் படி அவருக்குச் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.
சீமான் சனிக்கிழமையன்று ஆஜராகவில்லை. இந்நிலையில், கடந்த செவ்வாயன்று வளசரவாக்கம் காவல் நிலையத்தில் சீமான் தரப்பு வழக்கறிஞர்கள் அவர் ஆஜராகாதது குறித்து விளக்கம் அளித்தும், சீமான் தரப்பிலிருந்து ஒரு கடிதத்தையும் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அந்த கடிதத்தில் சீமான், இந்த வழக்கு குறித்து ஆதாரங்கள், ஆவணங்கள் தனக்குக் கொடுத்தால் மட்டுமே காவல் நிலையத்தில் ஆஜராகி தனது விளக்கங்களைக் கொடுக்க முடியும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தார்.
இதையடுத்து முதல் சம்மனில் சீமான் ஆஜராகாத நிலையில், இன்று வளசரவாக்கம் போலீசார் பாலவாக்கம் பகுதியில் உள்ள நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டிற்குச் சென்று இரண்டாவது முறையாக மீண்டும் சம்மன் வழங்கி உள்ளனர். அப்போது சீமான் போலீசாரிடம் இருந்து தனக்கு வழக்கு குறித்த ஆவணங்கள் எதுவும் கொடுக்காமல் தன்னால் காவல் நிலையத்தில் ஆஜராக முடியாது எனக்கூறி சம்மனை வாங்க மறுத்துள்ளார். அதன் பிறகு அவரின் வழக்கறிஞர்கள் மூலம் அந்த சம்மனைச் சீமான் பெற்றதாகக் கூறப்படுகிறது.