சென்னை: சுசீந்திரன் தயாரிப்பில் மனோஜ் பாரதிராஜா இயக்கியுள்ள படம் மார்கழி திங்கள். இப்படத்தில் பாரதிராஜா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு இசை அமைப்பாளர் இளையராஜா இசை அமைத்துள்ளார். இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் பாரதிராஜா, சுசீந்திரன், லிங்குசாமி , சிவக்குமார், கார்த்தி, மனோஜ் பாரதிராஜா, சீமான் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துக்கொண்டனர்.
விழா மேடையில் பேசிய சீமான், "சூப்பர் சுப்பராயனை உங்களுக்கு ஒரு சண்டை பயிற்சியாளராக தான் தெரியும் ஆனால் அவர் சிறந்த இலக்கியவாதி. அதேபோல் சூப்பர் சிவக்குமார் மிகச்சிறந்த ஓவியராக வரவேண்டியவர். எங்கள் அப்பா பாரதிராஜாவும், சிவக்குமாரும் ஒரு வயதுடையவர்கள். சிவக்குமாருக்கு எந்த பழக்கமும் இல்லை.
நாம் தமிழர் கட்சியில் பாரதிராஜா:என் அப்பாவுக்கு இல்லாத பழக்கமும் இல்லை. மேலும் சூர்யா, கார்த்தி ஆகிய இருவருமே தனி மனித உழைப்பால் இன்று முன்னேறி உள்ளனர். சிவகுமார் என்பது ஒரு அடையாள அட்டை மட்டுமே. மேலும் பாரதிராஜா அவர் மகனுடன் என் கட்சியில் தொண்டனாக இணைந்துள்ளார்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், ”மனோஜ் பாரதிராஜாவிடம் அப்பாவின் படங்களை பார். ஆனால் அவரை போல் படம் எடுக்காதே. உன்னை அவருடன் வைத்து ஒப்பிடுவார்கள். அதையெல்லாம் காதில் வாங்கிக் கொள்ள வேண்டாம் என்று தெரிவித்தார். பின்னர் இயக்குநர் பேரரசுவிடம், எத்தனையோ இயக்குநர்கள் படம் இயக்குகிறார்கள். நீ மறுபடியும் படங்களை இயக்க வேண்டும். படங்களை இயக்குவதை நிறுத்த வேண்டாம். புது முகங்களை வைத்து படம் இயக்க வேண்டும்” என்று கூறினார்.
பாரத் பெயரால், பசி தீர்ந்து விடுமா?: அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம் என்பது தான் பாஜகவின் கொள்கை. இந்தியா என்பதை பாரத் என்று மாற்றுவதில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் இப்படி பெயர் வைப்பதால் நாட்டு மக்களின் பசி தீர்ந்துவிடுமா?, 10 ஆண்டுகளாக இல்லாமல் இப்போது பாரத் என்று பெயர் வைக்க வேண்டிய அவசியம் என்ன?, மக்களை திசை திருப்ப பாரத், சனாதனம் என்றெல்லாம் பாஜக அரசு பேசி வருகிறது.