இலங்கையின் அலுவல் பணிகளிலும், கடவுச்சீட்டிலும் தமிழைப் புறக்கணித்துவிட்டு சீன மொழியை உட்புகுத்துவதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
”இலங்கையின் அலுவல் பணிகளிலும், அரசின் செயல்பாடுகளிலும், நாட்டின் கடவுச்சீட்டிலும் தமிழை முற்றிலும் புறக்கணித்துவிட்டு சீன மொழியை உட்புகுத்தி வரும் சிங்களப் பேரினவாத அரசின் செயல்கள் அதிர்ச்சியளிக்கின்றன.
’இலங்கையின் இனத்துவேசப் போக்கு’
இலங்கையின் அதிகாரப்பூர்வ அலுவல் மொழிகளாக சிங்களத்தோடு தமிழும் இருக்கும் நிலையில், தமிழ் மொழியை முழுவதுமாக நிராகரித்து, இன ஒதுக்கல் கொள்கையைக் கடைப்பிடிக்கும் இலங்கை அரசின் இனத்துவேசப் போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது.
சீனாவின் நிதியுதவியுடன் இலங்கையில் முன்னெடுக்கப்படுகின்ற ’கொழும்பு துறைமுக நகர்’ திட்டத்திலுள்ள பெயர் பலகைகளில் தொடங்கி, நாட்டின் கடவுச்சீட்டு வரை எல்லாவற்றிலும் சிங்களம், சீனம், ஆங்கிலம் ஆகிய மொழிகளுக்கு இடமளித்து, தமிழ் மொழியை மட்டும் திட்டமிட்டுப் புறக்கணித்து வருவது தமிழர்களிடம் கடும் கொந்தளிப்பையும் பெருஞ்சினத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.
கள்ள மௌனம் சாதிக்கும் சர்வதேசச் சமூகம்
இலங்கையின் பூர்வக்குடி மக்களான தமிழர்களை உரிமை, உடைமை, நிலவுரிமை, அதிகாரம், அரசாட்சி என எல்லாவற்றிலிருந்தும் முற்றுமுழுதாக வெளியேற்றி, சிங்களத்தேசமாக இலங்கையை ஒற்றை மொழியாதிக்கத்தின் கீழ் நிறுவிக் கொண்டிருக்கும் சிங்கள வெறியர்களின் கொடுங்கோல் நடவடிக்கைகளைத் தட்டிக் கேட்காது, சர்வதேசச் சமூகம் கள்ளமௌனம் சாதித்து வருவது ஆற்ற முடியாத பெரும் வலியைத் தருகிறது.
மொழி புறக்கணிப்புக்கெதிராக, ‘மொழி ஒன்றானால் நாடு இரண்டாகிப்போகும்’ என தந்தை செல்வா அவர்கள் முன்வைத்த பெரு முழக்கமும், அதனையொட்டி முன்னெடுக்கப்பட்ட அறப்போராட்டமுமே பின்னாளில், காலத்தின் தேவையாய், வரலாற்றின் பிரசவிப்பாய் விடுதலைப்புலிகளின் ஒப்பற்ற விடுதலைப்போராட்டமாகப் பரிணமித்தது எனும் வரலாற்றுப் பேருண்மையை, சிங்கள இனவெறி ஆட்சியாளர்களுக்கும், உலகத்தார்க்கும் நினைவூட்டுகிறேன்.
ஆதிக்கம் செலுத்தும் சீனா, தூக்கி எறியப்படும் தமிழ்
தமிழும் தமிழர்களும் ஒதுக்கப்பட்டு, புறந்தள்ளப்பட்டு வரும் அதே வேளையில், சீனாவின் அதீத ஆதிக்கமும், அதிகப்படியான அத்துமீறலும் இலங்கையில் வெளிப்படையாக நிகழ்ந்தேறுவது இந்தியாவின் இறையாண்மைக்கும் பாதுகாப்புக்கும் பேராபத்தாக முடியும் என்றுரைக்கிறேன்.
அலுவல் மொழியான தமிழைப் புறக்கணித்து சீன மொழியை ஆதரிக்கும் இலங்கை! இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருவது குறித்துக் கவலை தெரிவித்துள்ள தமிழ்நாடு காங்கிரசு கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி, 136 கோடி மக்கள் தொகையைக் கொண்ட வல்லரசு நாடுகளில் ஒன்றான இந்தியாவை இலங்கை உதாசீனப்படுத்தி வருவதாகக் குறிப்பிட்டிருக்கிறார். இதைத்தானே நாங்கள் தொடக்கத்திலிருந்தே கூறி வருகிறோம்.
ராஜபக்சேவோடு உறவாடிய காங்கிரஸ்
சிங்களர்களும், சிங்கள ஆட்சியாளர்களும் எந்நாளும் இந்தியாவின் பக்கம் நிற்க மாட்டார்கள் என்பதை வரலாற்று ரீதியாகவும், தர்க்க ரீதியாகவும் அறுதியிட்டுக் கூறி எச்சரித்து வருகிறோம். அப்போதெல்லாம் மகிந்தா ராஜபக்சேவோடு ஒட்டி உறவாடி தமிழர்களை அழிக்க வட்டியில்லா கடனாக பல்லாயிரம் கோடிகளைக் கொட்டிக்கொடுத்து, போர் ஆயுதங்களையும், இராணுவத் தளவாடங்களையும் அனுப்பி வைத்து, உலகளாவிய அளவில் நாடுகளிடையே ஆதரவு வட்டத்தை உருவாக்கி, ஈழப்பேரழிவை நிகழ்த்தி முடிக்க உறுதுணையாக நின்று தமிழர்களை அழித்தொழித்த காங்கிரஸ் கட்சி, இன்றைக்கு இலங்கையின் சீன உறவு குறித்து திருவாய் மலர்ந்தருளுவது வெட்கக்கேடானது.
தமிழ் மொழியைப் புறக்கணித்துவிட்டு, தமிழர் வழிப்பாட்டுத்தலங்களை பெளத்த விகாரங்களாக மாற்றிவிட்டு, தமிழர்களின் நிலங்களை சிங்களமயமாக்கிவிட்டு, தமிழர்களின் உரிமைகளைப் பறித்துவிட்டு ஒட்டுமொத்த நாட்டையும் சிங்களர்களின் தேசமாக மாற்ற முயலும் இலங்கை அரசின் சதிச்செயலையும், இனவெறி நடவடிக்கைகளையும் இனிமேலாவது பன்னாட்டுச் சமூகமும், அனைத்துலக நாடுகளும் உணர்ந்துகொள்ள வேண்டும்.
அடுத்தவர் சுதந்திரத்திற்காக போராடாவிட்டால் உன் சுதந்திரம் கேள்விக்குறியாகும்...
தமிழ்த்தேசிய இனம், இலங்கை எனும் நாட்டுக்குள் எந்தளவுக்கு நிராகரிக்கப்பட்டு ஒடுக்கப்படுகிறது என்பதற்கு இதைவிட வேறு சான்று தேவையில்லை. ‘அடுத்தவர் சுதந்திரத்திற்காக நீ போராடாவிட்டால் நாளை உன் சுதந்திரம் கேள்விக்குறியாகும்’ என்கிறார் ஹோசே மார்த்தி. இன்றைக்கு சுதந்திரம் பறிக்கப்பட்டு, தமிழ்த்தேசிய இனம் அடிமைப்படுத்தப்படும்போது மற்ற தேசிய இனங்கள் வேடிக்கைப் பார்த்து நின்றால், நாளை இதேபோல ஒரு இழிநிலை ஒவ்வொரு தேசிய இனத்திற்கும் வருமென்பதை உணர்ந்துகொண்டு தமிழர்களின் பக்கம் நிற்க வேண்டுமெனக் கோருகிறேன்.
’சிங்களப் பேரினவாதம் எதிர்வினையை சந்திக்க நேரிடும்’
இன்றைக்கு எங்களது தாய் நிலத்திலேயே எங்களது தாய்மொழி தமிழ் புறக்கணிக்கப்பட்டு, இரண்டாம் தரக் குடிமக்களாக தமிழர்கள் நாங்கள் மாற்றப்பட்டு, ஒன்றும் செய்யவியலாக் கையறு நிலையில் உலகத்தின் முன் நிற்கலாம். காலம் மாறும். ஒருநாள் களம் மாறும். அதிகாரம் எங்கள் கைவரப்பெறும். அன்றைக்கு எங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் எல்லாவற்றிற்குமான எதிர்வினையை சிங்களப் பேரினவாதம் உறுதியாக எதிர்கொள்ள நேரிடும் என எச்சரிக்கிறேன்.
இன்றைக்கு எங்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை வாய்மூடி வேடிக்கைப் பார்க்கும் சர்வதேசச் சமூகம், அன்றைக்கும் இதேபோல அமைதியைக் கடைப்பிடித்து இதேபோன்றதொரு நிலைப்பாட்டைக் கொண்டிருக்க வேண்டுமென விரும்புகிறேன்” என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.