உதயநிதி ஸ்டாலின் விரைவில் துணை முதல்வராகலாம் - சீமான் சென்னை: பூந்தமல்லி திரு இருதய குருத்துவக் கல்லூரியின் புனித வளனார் தமிழ்க் கழகம் நடத்திய ‘அடங்க மறுக்கும் தமிழும்(தமிழர்களும்) அடக்க துடிக்கும் சக்திகளும்’ என்ற தலைப்பில் மாணவர்களுக்கான சிறப்பு அமர்வு நடந்தது. இதில் கல்லூரி மாணவர்கள் முன்னிலையில் ‘தமிழ்த்தேசிய அரசியலின் அவசியம்' குறித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சிறப்புரையாற்றினார்.
மேலும் மாணவர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது மத்திய அரசு இந்தி திணிப்பு குறித்து கண்டனம் தெரிவித்து பேசிய அவர், மற்ற மொழிகளை கற்பதை தான் ஒருபோதும் எதிர்க்கவில்லை என்றும் மொழிகளை திணிப்பதை மட்டுமே தான் தொடர்ந்து எதிர்த்து வருவதாகவும் தெரிவித்தார்.
முன்னேறிய வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு எதற்கு என்று கேள்வி எழுப்பியவர், இட ஒதுக்கீடு வேண்டும் எனில் அவர்கள் பின் தங்கிய வகுப்புக்கு தங்களை மாற்றிக் கொள்ளட்டும் என்று கூறியுள்ளார். நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளரிடம் பேசிய சீமானிடம் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படுவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த சீமான், இது எதிர்பார்த்த ஒன்றுதான் என்றும் விரைவில் துணை முதலமைச்சராக கூட வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் அமைச்சராக பதவி ஏற்க உள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு சீமான் வாழ்த்து தெரிவித்தார்.
இதையும் படிங்க:அமைச்சரான பிறகு உதயநிதி நடிக்கக்கூடாது - இயக்குநர் அமீர்