நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் “இரண்டு நாள்களுக்கு முன்பாக மதுரையிலுள்ள துணிக்கடையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில், முன்கள வீரர்களாகத் தீயை அணைக்கப் போராடியபோது சிவராஜன், கிருஷ்ணமூர்த்தி ஆகிய இரண்டு தீயணைப்பு வீரர்களும் விபத்தில் சிக்குண்டு தங்கள் இன்னுயிரை இழந்தனர் எனும் செய்தி பெரும் துயரத்தை அளிக்கிறது. அவர்களை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தினருக்கு எனது ஆறுதலைத் தெரிவித்து அவர்களது துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
இவ்விபத்தில் சிக்குண்டு பலத்தக் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் சின்னக்கருப்பு, கல்யாணக்குமார் ஆகிய இருவரும் விரைந்து குணமடைந்து மீண்டு வரவேண்டும். அதிகப்படியான பாதுகாப்பு குறைபாடுகள், தரமற்றப் பாதுகாப்பு உபகரணங்கள், மிதமிஞ்சிய பணிச்சுமை, வயதுக்கு மீறிய பணி போன்றவைகளே இதுபோன்ற உயிரிழப்புகளுக்கு முழுமுதல் காரணங்களாகின்றன. இதனால், இந்த ஆண்டில் மட்டும் மூன்று தீயணைப்பு வீரரர்கள் உயிரிழந்திருக்கிறார்கள். இவ்வகை உயிரிழப்புகள் இனி ஒருபோதும் தொடர்ந்திராத வண்ணம் முறையானப் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து தீயணைப்பு வீரர்களின் உயிர்காக்க தகுந்தப் பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசு உறுதி செய்திட வேண்டும்.
எவ்வளவு நிதியளித்தாலும் அது ஓர் உயிருக்கு ஈடாகாதெனினும், பொதுமக்களின் நல்வாழ்விற்காகவும், பாதுகாப்பிற்காகவும் தங்கள் உயிரையே ஈகம் செய்யத் துணிந்து தன்னலமற்று, அர்ப்பணிப்புணர்வோடு பணியாற்றும் காவல், ராணுவம், மருத்துவம், தூய்மைப் பொறியாளர்கள், பேரிடர் மீட்புப் படையினருக்கு உயிரிழப்பின்போது அரசு வழங்கும் நிதியுதவியானது அவர்களது குடும்பத்தின் பொருளாதாரத்தை நிலைநிறுத்துவதாக இல்லை என்பதுதான் ஒட்டுமொத்த மக்களின் கருத்தோட்டமாக உள்ளது.