அரசிடம் நிதி இல்லையா... கடன் குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிடத் தயாரா? - சீமான் ஆவேசம் சென்னை: கரோனா பேரிடர் காலத்தில் கடந்த 2020ஆம் ஆண்டு பணியமர்த்தப்பட்ட MRB Covid செவிலியர்கள் 3290 பேரை பணி நீக்கம் செய்த அரசாணையினை திரும்பப் பெற வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றது. இதற்கு ஆதரவு தரும் வகையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அப்போராட்டத்திற்கு வருகை தந்தார்.
அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "கரோனா காலத்தில் எவ்வளவு அர்ப்பணிப்போடு செவிலியர்கள் பணியாற்றினார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்ற வாக்குறுதி கொடுத்தீர்கள். அதை நிறைவேற்றச்சொல்லி தான் தற்போது போராட்டம் நடைபெற்று வருகிறது.
5 நாட்கள் பட்டினியாக போராட்டம் நடைபெற்று வருகிறது. நிதி இல்லை என்று கூறுகிறார்கள். அதை ஒப்புக் கொள்கின்றோம், ஆனால் பெண்கள் கல்லூரிக்குச் செல்லும் பொழுது ரூ.1000 அவர்கள் கேட்டார்களா? கேட்காதவர்களுக்கு கொடுப்பதும், கேட்பவர்களுக்கு கொடுக்காமலும் இருக்கிறார்கள்.
மத்திய அரசு உதவவில்லை என்று கூறுகின்றனர், மத்திய அரசுக்கு யார் நிதி தருகிறார்கள், மாநில அரசு தானே. நிதி கொடுப்பதில் இரண்டாவது இடத்தில் தமிழ்நாடு உள்ளது. ஆனால், நம் மக்களுக்கு நிதி இல்லை என்றால் எதற்கு மத்திய அரசுக்கு நிதி கொடுக்க வேண்டும்.
உயிர் துச்சம் என அன்று பணியாற்றியவர்களை பணி நீக்கம் செய்தால் மறுபடியும் கரோனா வந்தால் யாரை அழைப்பீர்கள். சேவை செய்பவர்கள் வீதிக்கு இறங்கி போராடினால் சேவை எப்படி இருக்கும். அனைவரையும் நிரந்தரம் செய்ய வேண்டும். 6 லட்சத்து 50 ஆயிரம் கோடி தமிழ்நாடு மீது கடன் ஏன்? கடன் இவ்வளவு? எந்தெந்த துறைக்கு எவ்வளவு செலவு செய்யப்பட்டது என்ற வெள்ளை அறிக்கையை அரசு வெளியிடுமா?
நிரந்தரம் செய்துவிட்டால் அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். அதை தவிர்ப்பதற்காக இதுபோன்று செயல்களில் தமிழ்நாடு அரசு ஈடுபட்டு வருகின்றது. இதே காரணத்திற்காகத்தான் ஓய்வு வயதை அதிகரித்து வருகின்றனர். ஆங்கிலப் புத்தாண்டில் பணி நீக்கம் செய்யப்பட்டவர்களை தமிழ்ப் புத்தாண்டில் நிரந்தரம் செய்ய வேண்டும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கோவையில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: மொத்தம் 31 லட்சம் வாக்காளர்கள்