இது தொடர்பாக அவர் இன்று (ஆக.22) விடுத்துள்ள அறிக்கையில், " மத்திய அரசின் பல்வேறு துறைகளுக்குப் பணியாளர்களைத் தேர்வு செய்வதற்கான தேர்வுகளை நடத்த தேசிய தேர்வு முகமை (National Recruitment Agency - NRA) அமைத்திட மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
இதுவரை இரயில்வே, வங்கி, நிதிச்சேவைகள் என பல்வேறு துறைகளுக்கு எஸ்.எஸ்.சி (SSC), ஆர்.ஆர்.பி (RRB), ஐ.பி.பி.எஸ். (IBPS) எனத் தனித்தனி தேர்வு முகமைகள் மூலம் தங்களது துறைகளுக்கு ஏற்ப துறைசார்ந்த தேர்வுகளை நடத்திப் பணியாளர்களைத் தேர்வு செய்து வந்த நிலையில், அந்தத் தேர்வுகளை எளிமையாக்குவதாகக் கூறி ஒரே பொதுத்தேர்வின் கீழ் மத்திய அரசின் அனைத்துவிதமானப் பணியாளர்களையும் தேர்வுசெய்ய தேசிய தேர்வு மையத்தை தொடங்க இருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது தேர்வு முறையை எளிமையாக்கும் முயற்சியல்ல.
ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டுள்ள ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே வரி, ஒரே கல்வி, ஒரே தேர்தல், ஒரே தேர்வு, ஒரே பொது விநியோகம் எனும் ஒற்றைமயமாக்கலின் நீட்சியே.
வெவ்வேறு விதமான துறைகளுக்கு ஒரே பொதுத்தேர்வை வைத்து தேர்வு செய்தால் துறைசார்ந்த திறனாளர்களை எவ்வாறு கண்டறிய முடியும்? அல்லது அதற்கென தனியாகத் தேர்வு நடத்தப்படுமா? எனில், ஒரு பணிக்கு இரண்டு தேர்வுகளை எழுத வேண்டுமா? அனைத்துத் துறைகளுக்குமான பொதுவான உள்நுழைவுத் தேர்வுகளை மட்டுமே Common Eligibility Test (CET) இந்த தேர்வாணையம் நடத்துமெனில் துறைசார்ந்த தொழில்நுட்பப் பணியாளர்களை தேர்ந்தெடுக்கத் தனியான தேர்வு முகமைகள் செயல்படுமா? எனில், ஒரு துறைக்கு எதற்கு இரண்டு தேர்வாணையங்கள்? என எழும் அத்தனைக் கேள்விகளும் தேர்வுமுறைகள் முன்பைவிட இன்னும் கடுமையாக்கப்படுவதையே காட்டுகிறது.
மேலும், இந்த தேசிய தேர்வு முகமையின் தலைமையகம் டெல்லியிலிருந்து செயல்படும் என்பதும் இந்தி பேசும் மக்களுக்கே சாதகமாக அமையும். ஏற்கனவே, தென்மாநிலங்களில் குறிப்பாக தமிழகத்தில் வங்கி, இரயில்வே, அஞ்சலகம் உள்ளிட்ட மத்திய அரசுப் பணிகளில் வடமாநிலத்தவர் பெருமளவு ஆதிக்கம் செலுத்துகின்றனர்.
அதுவும் தமிழே தெரியாதவர்கள் தமிழ் பாடத்தில் தமிழர்களைவிட அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சியடையும் அளவுக்கு ஊழலும், நிர்வாகச் சீர்கேடும் மலிந்துக் கிடக்கிறது. இதில் அனைத்துத் துறைகளுக்கும் ஒரே தேர்வு அதுவும் டெல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் அமைப்பினால் நடத்தப்படும் என்பது வடமாநிலத் தேர்வர்களுக்கே வாய்ப்பாக அமையும். மேலும், அனைத்து அதிகாரங்களும் ஒற்றை அமைப்பிடம் குவிக்கப்படுவதால் அது அதிக அளவிலான ஊழலுக்கும், முறைகேடுகளுக்குமே வழிவகுக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க இயலாது.