வீடுகளை இழந்து தவிக்கும் அனகாபுத்தூர் குடியிருப்புவாசிகள்: சீமான் நேரில் சந்தித்து ஆறுதல்! சென்னை: பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர் அடையாறு ஆற்றின் கரையோரம் தாய் மூகாம்பிகை நகர், டோபி கானா தெரு, சாந்தி நகர் உள்ளிட்ட தெருக்களில் சுமார் 700 க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. நீர்நிலை மற்றும் புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமித்து கட்டப்படும் வீடுகளை எவ்வித சமரசமுமின்றி உடனடியாக அகற்ற தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இதையடுத்து, அனகாபுத்தூர் அடையாறு ஆற்றின் கரையை ஆக்கிரமித்து கட்டப்பட்டு உள்ள வீடுகளை இடித்து அகற்றும் பணியில் சென்னை மாநகராட்சி நிர்வாகம் இறங்கி உள்ளது. செங்கல்பட்டு மாவட்ட மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத் உத்தரவின் படி, பல்லாவரம் வட்டாட்சியர் ஆறுமுகம் தலைமையில் வருவாய் துறை அதிகாரிகள் கடந்த நவம்பர் 4ஆம் தேதி காலையில் இருந்து நேற்று (நவ. 5) வரை ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
ஆக்கிரமிப்பு வீடுகளில் இருந்த பொது மக்களுக்கு தாம்பரம் கிஷ்கிந்தா செல்லும் சாலையில் உள்ள தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில் புதியதாக அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டித் தரப்பட்டுள்ளன. தற்போது அங்கு பொதுமக்கள் சென்று வசிக்க துவங்கி உள்ளனர். தற்போது வரை 25க்கும் மேற்பட்ட வீடுகள் இடிக்கப்பட்டு உள்ளன.
இந்த நிலையில் அடையார் ஆற்றங்கரை ஓரமாக இருக்கும் பொது மக்களை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த சீமான் கூறுகையில், "பல்லாவரம் பகுதி மக்களின் வாழ்விடங்களை ஆக்கிரமிப்பு என கூறி இடித்து தரைமட்டம் ஆக்குவது மிகப்பெரிய கொடுஞ்செயல்.
இது புதிதல்ல பலமுறை போராடி வருகிறோம். பல இடங்களில் ஆக்கிரமிப்பு என்கிற குற்றச்சாட்டை வைத்து வீடுகளை இடித்து மக்களை வெளியேற்றி, செம்மஞ்சேரி, கல் குட்டை போன்ற நகரின் வெளிப்பகுதிகளுக்கு அனுப்பி விடுகின்றனர். பல தலைமுறைகளாக வாழ்ந்த மக்களை தலைநகரில் இருக்க விடக்கூடாது என்பதே இதன் நோக்கமாக இருக்கிறது.
முதலில் இந்த பகுதி ஆறு என கூறினார்கள், வீடுகள் ஆக்கிரமிப்பு என்றால் பேருந்து நிலையமும் ஆக்கிரமிப்பு தான். அதை ஏன் அகற்றவில்லை?. ஆக்கிரமிப்பு என்பது ஆற்றில் இரண்டு புறமும் சரிசமமாக எடுக்க வேண்டும். கடந்த 70 வருடமாக வாழும் மக்களிடம் ஆக்கிரமிப்பு என கூறும் போது, முதல் செங்கலை வைக்கும் பொழுது நீங்கள் அதை தடுக்காமல், இத்தனை வருடமாக மின் இணைப்பு, வாக்காளர் உரிமை, எரிவாயு இணைப்பு, வீட்டு வரி போன்றவை அனைத்தையும் செய்து கொடுத்துவிட்டு தற்சமயம் ஆக்கிரமிப்பு எனக் கூறுவது யாருடைய தவறு.
இத்தனை நாள் அரசு என்ன செய்து கொண்டிருந்தது, முதலில் ஆறு எனக் கூறி ஆக்கிரமிப்பு அகற்றுகிறோம் என வந்த அரசு, இது ஆறு இல்லை என தெரிந்தவுடன் அரசு இடம் எனக் கூறுகிறது. இதுவரையில் இந்த அரசு என்ன செய்து கொண்டு இருந்தது. இது யாருடைய மெத்தன போக்கு, அடித்தட்டு மக்கள் என்பதற்காக இடித்து தரைமட்டம் ஆக்கிக் கொண்டிருக்கிறது.
இந்த இடத்தை வைத்து அரசு என்ன செய்யப் போகிறது. பெரும் முதலாளிகளுக்கான இடமாக இதை மாற்றிக் கொடுப்பார்கள். வேறு என்ன செய்யப் போகிறீர்கள். ஆற்றில் நீரோட்டத்தினை மரங்களும், செடிகளும் மண்டி தடுத்துள்ளது. அதை சரி செய்வதை விட்டுவிட்டு வீடுகளை இடித்து வருகின்றனர். வேறு இடத்திற்கு அனுப்புவதாக அரசு கூறுகிறது, அரசு கட்டிக் கொடுக்கும் வீடு எந்த அளவிற்கு இருக்கும் என்பது நமக்கு தெரியாதா?.
சுவரில் கை வைத்தால் சுவர் பேந்து விழுந்து விடும், படுத்தால் காலையில் உயிருடன் எழும்புவோமா என தெரியாமல் எப்படி அங்கு சென்று படுப்பது. அனைவரின் வாழ்விடமும் வாழ்வாதாரமும் இங்கு தான் உள்ளது. அனைவரும் கூலி வேலை செய்பவர்கள் இந்த நிலைமையில் இருக்கும் மக்களை மாநகரின் வெளிப்பகுதியில் அனுப்பி விட்டால் அதற்கான கட்டமைப்பு என்ன இருக்கும், இது அவசியமற்ற செயல்.
அப்படிப் பார்த்தால் மதுரை உயர்நீதிமன்றம் ஏரி ஆக்கிரமிப்புதான், வள்ளுவர் கோட்டம் ஏரிதான், எம்எம்டிஏ குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளதும் ஏரி தான், திருவள்ளூர் நீதிமன்றமும் ஏரியில் தான் கட்டப்பட்டு உள்ளது. இது ஏற்புடையதல்ல, இந்த முயற்சியை கைவிட வேண்டும். இல்லையெனில் நான் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவேன்" என்று சீமான் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தாய்லாந்திலிருந்து விமானத்தில் சென்னைக்கு அரிய வகை விலங்குகள் கடத்திய ஒருவர் கைது!