சென்னை: சென்னை அரும்பாக்கம் ராதாகிருஷ்ணன் நகரில் கூவம் ஆற்றங்கரையோரம் ஆக்கிரமித்து கட்டப்பட்டதாக கூறி, 90-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிக்கப்பட்டு அதிலிருந்தோர் புளியந்தோப்பு குடிசை மாற்று வாரிய குடியிருப்பிற்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், தற்போதுவரை வீடு வழங்கப்படாமல் உள்ள குடிசை வாழ் மக்களை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் சந்தித்தார். பாதிக்கப்பட்ட மக்களின் வீடுகளுக்கு சென்ற சீமானிடம் அப்பகுதி மக்கள் கண்ணீர் மல்க தங்களது குறைகளை கூறினர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சீமான், "மக்களை வெளியேற்றுவதில் திமுக, அதிமுக என்று வேறுபாடில்லை. கருணாநிதி, ஜெயலலிதா, பழனிசாமி ஆட்சியிலும் இதுபோன்று நடந்துள்ளது. ஆக்கிரமிப்பு என்றால் மின் இணைப்பு, எரிவாயு, குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை எப்படி கொடுத்தார்கள்.
இந்த இடம் யாருக்கு வழங்கப்பட உள்ளது. எந்த நோக்கத்தில் பயன்படுத்தப்பட உள்ளது. 2022ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு இருக்கும் என பிரதமர் கூறுகிறார். ஆனால், இப்போது வரை பலருக்கு வீடில்லை.
பொருளாதாரமே கவலை - ஸ்மார்ட் சிட்டி எதுக்கு
வெள்ள அபாயம் வரும்போது தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதை காரணமாக வைத்து கூவம் கரையோரம் வாழ்பவர்களை வெளியேற்றுவதாக கூறுவது பொய். அவர்களின் வாழ்வாதாரம் இந்த பகுதியில்தான் இருக்கிறது.
அரசின் பொருளாதாரமே கவலையில் இருக்கிறது. கூவம் ஆற்றில் ஸ்மார்ட் சிட்டி எதுக்கு, தலைநகரில் தமிழர்கள் வாழக்கூடாது என திட்டமிட்டு இவ்வாறு செய்கிறார்கள். ஆக்கிரமிப்பு என்ற சொல்லே அருவருக்ககத்தக்கது.
நீதிமன்றமே ஆக்கிரமிப்பு இடத்தில் கட்டப்பட்டதாக இருக்கும்போது தாஜ்மஹாலாகவே இருந்தாலும் ஆக்கிரமிப்பு இடத்தில் இருந்தால் அகற்றுவோம் என நீதிமன்றம் கூறியது நகைப்பிற்குரியது. ஆட்சியருக்கு தெரியாமல் இந்த மக்கள் எப்படி இங்கு குடியேறி இருக்க முடியும்.