சென்னை சின்னபோரூரில் உள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் மகாகவி பாரதியார் 101ஆவது நினைவு தினம் மற்றும் இம்மானுவேல் சேகரனாரின் 65ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு அவர்களது திரு உருவப் படத்திற்கு, அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மலர்த்தூவி மரியாதை செய்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "சாதிய ஏற்ற பாகுபாடுகளை புறந்தள்ளபாடுபட்டவர் இம்மானுவேல் சேகரன். அவர் தமிழ் குடியில் பிறந்ததனால் என்றும் தமிழன் பெருமைக்குரியவன். பெரும்பாவலர் பாரதிக்கும், இம்மானுவேல் சேகரன் அவர்களுக்கும் நாம் தமிழர் கட்சியின் சார்பாக வீர வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறோம். அடுத்த தலைமுறையாவது சாதி மத பேதம் இல்லாமல் தமிழ் தேசிய பிள்ளைகளாக வளர வேண்டும்.
திமுகவின் திராவிட மாடல் என்பதே இரட்டை வேடம் தான். எட்டு வழிச்சாலையை எதிர்க்கட்சியாக இருக்கும்போது திமுக எதிர்த்து பேசியது, ஆனால் இப்போது ஆதரித்து பேசுகிறது. அதேபோல தான் மின்கட்டண உயர்வு மத்திய அரசின் அழுத்தம் என மாநில அரசு உயர்த்துகிறது. எதிர்க்கட்சியாக இருக்கும்போது மக்களின் மனநிலை உணர்வுகளுக்காக போராடிய திமுக, தற்போது மின் கட்டணத்தை உயர்த்துவது இரட்டை வேடத்தன்மையை சுட்டிக்காட்டுகிறது அதுதான் திராவிட மாடலின் ஆட்சி முறை.
அண்ணாமலைக்கு என்ன பேசுவது என்று தெரியவில்லை. அவ்வப்போது அவர் பேசுவது வேடிக்கை ஆகி விடுகிறது. நீட்டை கொண்டு வந்தது காங்கிரஸ், அதை ஆதரித்தது திமுக, செயல்படுத்தியது பாஜக, ஆகவே அண்ணாமலை திமுக மீது வீண்பழி போடுகிறார். காங்கிரஸ் கட்சியை ஒழிக்க வேண்டும் என்று பெரியார் அப்போதே கூறினார். சுதந்திரப் போராட்ட தியாகிகளின் பெயரைக் குறிப்பிட்டு வள்ளலார் பூமி, பூலித்தேவர் பூமி என்று ஏன் அழைக்கவில்லை. பெரியார் மண் எனக் கூறுவது ஏன்?.